பக்கம் எண் :

116தமிழ் வரலாறு

"குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்" (புறம். 33) என்னும் பாடத்தைப் "பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்" என்றும், "முட்டிபுகும் பார்ப்பார்" (கம்பர் தனிப்பாடல்) என்னும் பாடத்தை "இட்டமுடன் பார்ப்பார்" என்றும் மாற்றியதும் சொன்மறைப்பே.

(12) தமிழ்ச் சொற்பொருள் மறைப்பு

சிவம் என்பது மங்கலம் என்று பொருள்படுவதென்றும், முருகன் என்பது சேவற்கொடியோன் என்று பொருள்படுவ தென்றும்,கூறுவது சொற்பொருள் மறைப்பாம்.

(13) தமிழ்க் கருத்து மறைப்பு

"இயல்புடைய மூவர்" என்பார் பிரமசரியம், வானப்பிரத்தம், சந்நியாசம் என்னும் முந்நிலைப்பட்டவர் என்றும், பிதிரராவார் (தென்புலத்தார்) படைப்புக்காலத்துப் பிரமனாற் படைக்கப்பட்ட ஒரு தேவ வகுப்பார் என்றும், பரிமேலழகர் கூறுவது தமிழ்க் கருத்து மறைப்பாம்.

(14) தமிழ் எழுத்து மறைப்பு

தமிழ் ஏட்டெழுத்து பிராமியெழுத்தினின்று திரிந்ததென்றும், கிரந்தவெழுத்தினின்று தோன்றியதென்றும், கூறுவது தமிழ் எழுத்து மறைப்பாம்.

(15) முக்கழக மறைப்பு

தலையிடைகடையாகிய முக்கழகமும் பாண்டிநாட்டிலிருந்த தில்லையென்றும், தமிழ்நாட்டிலிருந்த கழகமெல்லாம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மதுரையில் தோன்றிய சமண சங்கமேயென்றும், கூறுவது முக்கழக மறைப்பாம்.

(16) தமிழ் வரலாற்று மறைப்பு

தமிழர் கிரேக்க நாட்டினின்று வந்தவரென்றும், அவர் தமிழ் நாட்டு வரலாறு கி.மு. 3ஆம் நூற்றண்டினின்றே தொடங்குவ தென்றும், இந்திய வரலாற்றிற்கெல்லாம் அடிப்படை ஆரிய வேதமேயென்றும், கூறுவது தமிழ் வரலாற்று மறைப்பாம்.