|
அன்னீறு பெற்ற ஆளன் என்னும்
சொல்லும், இகரவீறு பெற்ற ஆளி என்னும் சொல்லும்,
ஆண் பாலீறு போன்றும் வழங்கும்.
எ-டு: வேளாளன், தாளாளன்.
முதலாளி, மலையாளி.
இனி, உடைமையும் உரிமையும் உணர்த்தும்
காரன் என்னும் சொல்லும் ஆண்பாலீறாம்.
எ-டு: வீட்டுக்காரன், வண்டிக்காரன்.
தையற்காரன், வேலைக்காரன், கூலிக்காரன்
என்னும் சொற் களும், தையல் வேலைக்கும் வேலை செய்தற்கும்
கூலித் தொழி லுக்கும் உரியவன் அல்லது அத் தொழில்களை
உடையவன் என்றே பொருள் படும்.
கடுமை = மிகுதி, வலிமை. கடு - கடி - கரி -
காரம் = கடுமை, மிகுதி, வலிமை, அதிகாரம், உரிமை.
காரம் - காரன் = உரிமையாளன், உடையவன்.
வடமொழியிலுள்ள க்ரு என்னும் வினையடியாகப்
பிறந்து, செய்பவனைக் குறிக்கும் கார என்னும்
சொல்லினின்று காரன் என்னும் ஆண்பாலீறு திரிந்ததாக
வடவர் கூறுவது பொருந்தாது. ஆட்டுக்காரன், கடைகாரன்,
கப்பற்காரன், காய்ச்சற்காரன், குடைகாரன்,
குருவிக்காரன், கோழிக்காரன், சொந்தக்காரன்,
தட்டுக்காரன், தோட்டக்காரன், நிலத்துக்காரன்,
பட்டக்காரன், பணக்காரன், பாளையக்காரன்,
பிள்ளை குட்டிக்காரன், புன்செய்க் காரன்,
புள்ளிக்காரன், பொறுமைக்காரன், பொறாமைக்காரன்,
மாட்டுக்காரன், முட்டைக்காரன் முதலிய எண்ணிறந்த
பெயர்கட்கு, உரிமைப் பொருளன்றிச் செய்கைப்பொருள்
சிறிதும் பொருந்தாமை காண்க.
பெண்பாலீறுகள்
ஆள் என்னும் சொல், ஆடவனுக்கு ஆட்படுகிறவள்
என்னும் கருத்தில் பெண்பாலீறாயிற்று. சேரநாட்டுத்
தமிழின் திரிபாகிய மலையாளத்தில், ஆள் என்னுஞ்
சொல் அந்நாட்டு வழக்கிற்கேற்ப ஓகார முதற்சொல்லாய்த்
திரிந்து, மனைவியைக் குறிக்கின்றது. அது
தெலுங்கில் ஆலு என்று திரிந்து பெண்ணைக்
குறிக்கின்றது, கூமொழியிலும் இங்ஙனமே ஆதலால், பண்டைத்
தமிழிலும் இவ் வழக்கு இருந்திருத்தல் வேண்டும். இன்றும்,
மனையாள் என்னும் முறைப் பெயரும் வந்தாள் என்னும்
வினையாலணையும் பெயரும், மனையோள், வந்தோள் என
மலையாளத்தை யொத்துத் தமிழிலும் திரிதல் காண்க.
|