பெண்டாளுதல் என்னும் வழக்காறு, மனைவி
கணவனால் ஆளப் பெறுதலை உணர்த்தும்.
ஆள் என்னுஞ் சொல் பாற்பொதுமை நீங்கி
ஆடவனைக் குறித்தற்கு, ஆண் என்று திரிந்தது. ஆண் என்னும்
சொல்லே, ஆன் என்று திரிந்து ஆண்பாலீறானதாகத் தெரிகின்றது.
ணகரம் வடதிரவிட மொழிகளிற் பொதுவாக னகரமாகத்
திரிவதால், ஆண் என்னும் சொல் அங்கு ஆன் என்றுதான்
இருக்கும். ஆனீறு பின்னர் அன் என்று குறுகிற்று. எ-டு:
அவன், செல்வன்.
அன்னீறு பின்பு அல் எனத் திரிந்தது.
னகர மெய்யீறு லகர மெய்யீறாகத் திரிதல் இயல்பே.
எ-டு: திறம்-திறன்-திறல், செய்வென்-செய்வன்-செய்வல்,
ஆல்-ஆன் (3ஆம் வே.உ.), மேல்-மேன்.
அண்ணல், இளவல், செம்மல், வள்ளல் முதலிய
பெயர்களின் அல்லீறு ஆண்பாலீறே. குரிசில் என்பது
குருசல் என்பதன் திரிபா யிருக்கலாம். ஒ.நோ: பரிசல்-பரிசில்.
ஆனீறு ஓன் என்றும் திரியும் எ-டு:
முன்னான்-முன்னோன்.
மாந்தனையும் பிள்ளையையும் குறிக்கும்
மக என்னும் சொல் அன்னீறுபெற்று மகன் என்றாகும்.
அதுவும் ஓர் ஆண்பாலீறாம்.
எ-டு: பெருமகன், திருமகன், துரைமகன்.
மகன் என்னும் ஈறு மான் என்று மருவும்.
எ-டு: பெருமகன் - பெருமான், திருமகன்
- திருமான், மரு மகன் - மருமான்.
மான் ஈறு மன் என்று குறுகும்.
எ-டு: வடமன்.
அன்னீறு பெற்ற அப்பன், ஐயன், அண்ணன்
என்னும் முறைப் பெயர்களும், அருமை குறித்த ஆண்பாலீறாக
வழங்கும்.
எ-டு: கண்ணப்பன், பொன்னையன், கருப்பண்ணன்.
பால் தோன்றாத முதற்காலத்தில்
இகரவீறு ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய
ஒருமைப்பால் மூன்றையும் உணர்த்தி வந்தது. அவ் வழக்கு
இன்றுமுளது.
எ-டு: தொழிலாளி, விறகுவெட்டி - ஆண்பால்
கிழவி, கயற்கண்ணி - பெண்பால்
மண்வெட்டி, காடைக்கண்ணி
- ஒன்றன்பால்
|