பக்கம் எண் :

கிளர்நிலைப் படலம்125

(37) சொக்கப்பா

ஆரியத்தை எதிர்த்தும், தனித்தமிழ்ப் புலவரை ஊக்கியும் தமிழ் நாகரிகச் சிறப்புப்பற்றி வரலாற்று நூல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வரைந்தும், தமிழைப் போற்றிவருபவர் பேரா.சொக் கப்பா ஆவர்.

(38) மெ.சுந்தரனார்

மறைமலையடிகட்குப்பின், தந்நலமின்றித் தமிழைப் பேணு பவரும், தமிழின் உயர்வைத் தெளிவாய் உணர்ந்தவரும், தனித் தமிழாளரை அழுக்காறின்றிப் போற்றுபவரும், தமிழக்கு ஆக்கந்தரும் நூல்கள் வெளிவர வழிவகுப்பவரும், பண்டாரகர் மெ.சுந்தரனார் ஒருவரே.

(39) சி. இலக்குவானார்

தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் அமைத்தும், மாணவர்க்குத் தமிழுணர்ச்சி யூட்டியும், "குறள்நெறி" என்னும் இருகிழமை யிதழ் நடத்தியும், இந்தியை யெதிர்த்தும், அதனாற் பதவியை இழந்தும் சிறைசென்றும், தமிழால் இடர்ப்பட்டு வருபவர் பர்.சி. இலக்கு வனார் ஆவர்.

(40) பெருஞ்சித்திரன்

"தென்மொழி" என்னும் ஒரே தனித்தமிழ்த் திங்களிதழ் வாயிலாய், தமிழுக்குத் தாய்மொழியுணர்ச்சி யூட்டி வருபவர் பெருஞ்சித்திரனார் ஆவர்.

(41) வ. சுப்பையாப் பிள்ளை

தமக்கு இயற்கையாகவுள்ள உண்மைத் தமிழ்ப்பற்றினாலும், அச்சீடும் கட்டடமும்பற்றிய கவின்கலைச் சிறப்புணர்வினாலும், வணிக மதிநுட்பத்தாலும், கிடைக்காத நூல்கள் கிடைக்குமாறும் விளங்காத நூல்கள் விளங்குமாறும், ஆயிரத்திற்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களை உரையுடனும் அச்சிட்டு, உலகமுழுதும் பரப்பித் தமிழ்நூல் வெளியீட்டுத் துறையில் வாகைசூடியும்; தமையனார்போல் தமிழ்க்காப்புத் துறையில் ஈடுபட்டும்; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பணித்துறையை முன்னினும் பன் மடங்கு விரிவுபடுத்தியும்; தலைமைத் தமிழ்ப் புலவரையெல்லாம் கழக நூற்பணியில் தொடர்புகொள்ளச் செய்தும்; ஓய்வுபெற்ற தமிழ்ப்புலவர்க்கு வேலையளித்துதவியும்; சென்னைவாணர்க்குச் சிறப்பாகப் பயன்படும் மறைமலையடிகள் நூல்நிலையத்தை நிறுவியும்; பல்கலைக்கழகங்கள் செய்யாத பொதுநலத் தொண்டை இடைவிடாது செய்துவருபவர், திரு. வ. சுப்பையாப் பிள்ளையாவர்.