பக்கம் எண் :

வருநிலைப் படலம்129

(24) தமிழ்ப்பற்றாற் பதவியிழந்தோரைப் பின்னோக்கிய வலிமை யொடு (Retrospective effect) மீண்டும் பதவியில் இருத்துதல்.

(25) வருவாயற்ற பெருந்தமிழ்ப் புலவர்க்கு உதவிச் சம்பளம் அளித்தல்.

(26) தமிழுணர்ச்சியைப் பரப்பிப் பொதுமக்கட்குத் தமிழறிவு புகட்டும் தனித்தமிழ் இதழ்கட்குப் பொருளுதவி செய்தல்.

(27) மேனாட்டாரைத் துணைக்கொண்டு, தென்மாவாரியில் ஆழ மூழ்கிப் பழம்பொரு ளெடுத்தாராய ஏற்பாடு செய்தல்.

(28) அலுக்கிற்கும் அளபெடைக்கும் போதிய இடைவெளி விட்டு, இம்மியும் பிசகாது தியாகராசையத் கீர்த்தனைகள் போன்றே இன்பமாய்ப் பாடக்கூடிய உயரிய மெட்டுப் பாடல்களை அறிவும் ஒழுக்கமும் தழுவிய பொதுப் பொருள்கள்பற்றி, இயற்றித்தரும் இசைவாணர்க்கும் பாவலர்க்கும் சிறந்த பரிசளித்தல்.

(29) ஊர்காவலர் படைத்துறையினர் உடற்பயிற்சியும் மெய்க் காட்டும் (parade), தமிழ் ஏவற் சொற்களைக் கொண்டு நடப்பித்தல்.

(30) கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இறுதியில் உலக வாழ்த்துப் பாட்டுத் தமிழிற் பாடல்.

(31) மறைமலையடிகள், (P.T.) சீநிவாசையங்கார், (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவர்க்கும் சென்னையில் படிமை நிறுவுதலும், அம் மூவர் முழுவுருவப் படங்களையும் முதன்மையான அரசியல் அலுவலகங்களிலும் பொதுக் கூடங்களிலும் மாட்டி வைத்தலும்.

(32) செய்யுட்கே சிறப்பாக வுரிய இலக்கணக் கூறுகளை நீக்கி விட்டு, உரைநடை யிலக்கணத்தைமட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிப் பொதுத்தமிழ் மாணவர்க்குப் பாடமாக வைத்தல்.

(33) இகரத்தின் நெடிலைக் குறித்தற்கு, இடைக்காலத்தில் ஆரியராற் புகுத்தப்பட்ட. வாயிற்கால்போன்ற கிரந்த வரிவடிவை நீக்கிவிட்டு, இறுதியிற் சுழிகொண்ட பழைய இகர வடிவையே கையாளுதல்.

(34) இங்கிலாந்தில் 1875ஆம் ஆண்டிற் செய்தவாறு, தமிழ் நாட்டில் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைச் சட்ட வாயிலாய்ப் புகுத்துதல்.