|
ஆண்மை கொண்ட பெண்ணைப் பேடன் என்பது
போல் பெண்மை(பெண்டன்மை) கொண்ட ஆணைப் பேடி என்பது
மரபு. இவ் விரண்டிற்கும் பொதுவானது பேடு என்னுஞ்
சொல். ஆணும் பெண்ணும் அல்லாதது அல்லது கலந்தது அலி.
இப் பெயர்கள் வினை கொள்ளும்போது, பேடன் வந்தான்,
பேடி வந்தாள், பேடு வந்தது, அலி வந்தது என ஆட்டன்மையும்
சொல்லீறும்பற்றி வரும். இது இலக்கண மரபு.
உலக வழக்கில், பேடியைப் பெட்டையன்
என்றும், ஆண்மை யற்றவனைப் பெண்ணையன் அல்லது அண்ணகன்
என்றும், உருவம் பற்றிப் பேடி வந்தான், பெண்ணையன்
வந்தான், அண்ணகன் வந்தான் என்றும், கூறுவதே மரபாம்.
அலியாயின், ஆணலியை வந்தான் என்றும், பெண்ணலியை
வந்தாள் என்றும், உருவத்திற் கேற்பக் கூறுவர்.
ஆளன் என்னும் ஆண்பாலீறு, பெண்பாலில்
ஆட்டி என்று திரியும். ஆள் + தி = ஆட்டி. ‘தி‘ என்பது
அத்தி என்பதன் குறுக்கம்.
எ-டு: கண்ணாளன் - கண்ணாட்டி, திருவாளன்
- திருவாட்டி, வெள்ளாளன் - வெள்ளாட்டி.
காரன் என்னும் ஆண்பாலீறு, பென்பாலிற்
காரி என்று திரியும்.
எ-டு: கெட்டிக்காரன்
- கெட்டிக்காரி, பணக்காரன் - பணக்காரி.
மானீற்று ஆண்பாற் பெயர்கட் கொத்த
பெண்பாற் பெயர்கள், மாட்டி என்னும் ஈறு கொள்ளும்.
மகள் - மாள் + தி = மாட்டி.
எ-டு: திருமான் - திருமாட்டி, பெருமான் -
பெருமாட்டி.
திரு என்னும் சொல் ஸ்ரீ என்றும், திருமான்
என்னும் சொல் ஸ்ரீமத் என்றும், வடமொழியில் திரியும்.
ஸ்ரீமத் என்பதன் பெண்பால் ஸ்ரீமதீ-திருமதி
சில பெண்பாற் பெயர்கள் வடமொழியிலும்
தென்மொழி யிலும் வெவ்வேறு வகையில் அமைந்து, ஒன்றுபோல்
தோன்றும்.
எ-டு: பதி-பத்நீ (வ.) = மனைவி.
பத்தன்-பத்தினி(தெ.)
= கணவனிடத்திற் பத்திபூண் டவள், கற்புடை மனைவி.
சில பெண்பாற் பெயர்கள் இகர வீற்றுடன்
இச்சி யீறுங் கொள்ளும்.
எ-டு: குருவிக்காரன்
- குருவிக்காரிச்சி, வெள்ளைக்காரன் -
வெள்ளைக்காரிச்சி.
|