பக்கம் எண் :

இயனிலைப் படலம்67

(1) செய்ய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

இவ் வினையெச்சம் அல்லீற்றுத் தொழிற்பெயரினின்றே தோன்றியிருப்பதால், ஆங்கிலத்திற்போல் தமிழிலும் எழுவாய் (Noun Infinitive) ஆதல் கூடும்.

எ-டு: எனக்குப் பாடத்தெரியும் = எனக்குப் பாடல் (பாடும் வினை) தெரியும்.

இதிற் பாட்டு என்னும் பெயர் தொக்குநின்றதாகக் கொள்ள முடியாது. எனக்குப் பாட்டுப்பாடத் தெரியும் என்று இத் தொடரி யத்தை விரிப்பின், எனக்கு வரத்தெரியும் என்பது, வரவுவரத் தெரியும் என்று விரித்தற் கிடந்தராமை காண்க.

(2) செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

கோழி கூவிப் பொழுது விடிந்தது.

இதிற் கூவி என்பதைக் கூவ எனத் திரிப்பர் தமிழ் இலக் கணியர். ஆங்கிலத்திற்போல் தனிநிலை யமைப்பைத் (Absolute Construction) தமிழுக்குங் கொள்ளின், இங்ஙனந் திரிக்கத் தேவையே யில்லை. இத்தகைய அமைப்பு தமிழில் அருகிவராது பெருவழக்கா யிருத்தல் கவனிக்கத்தக்கது.

எ-டு: கூட்டம் முடிந்து, எல்லாரும் போய்விட்டார்கள்.

(3) முக்கால நந்நால்வகை

இது முன்னரே வினைச்சொற் பகுதியிற் கூறப்பட்டுவிட்டது. ஆண்டுக் காண்க.

iii பொருள்

தமிழ் இலக்கணத்தின் மூன்றாம் பகுதி பொருள் என்பதாகும். சொல்லிற்கே பொருளுண்மையாலும், பண்டையிலக்கியமெல்லாம் செய்யுள் வடிவி லிருந்தமையாலும், செய்யுட்குத் தொடரியமன்றி எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்பனவே உறுப்பாகை யாலும், சொல்லிற்கடுத்த மொழியுறுப்பை அல்லது இலக்கணப் பகுதியைப் பொருள் என்றே கொண்டனர், முதனூலாசிரியனும் வழிநூலாசிரியருமான முன்னூலாசிரியர்.

இலக்கியமெல்லாம் அல்லது எழுதப்பெற்றனவெல்லாம் செய்யுளா யிருந்தமையால், பொருளில் யாப்பும் அடங்கிற்று. வல்லோர் அணிபெறச் செய்வனவே செய்யுளாதலால், யாப்பில் அணியும் அடங்கிற்று.