பக்கம் எண் :

103

21
வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள்

     மக்களின் மண்ணுலக வாழ்நாட் பேரெல்லை வரவரக் குறைந்து, இன்று நூறாண்டாகக் கொள்ளப்படுகின்றது.

     "மாந்தர்க்கு வயது நூறல்ல தில்லை" என்பது கபிலரகவல். ஒருவர் தாம் நினைத்தவுடன் எதிர்வந்து நிற்கும் உறவினரையோ நண்பரையோ பார்த்து, உங்கட்கு அகவை நூறு (நூறாண்டு) என்பது உலக வழக்கு. 'மக்கள் நூறாண்டு வாழ்க்கை' என்று ஒரு நூலும் மறைமலையடிகள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

     "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்னும் உண்மையினாலும், பிள்ளை பிறந்து ஓராண்டிருப்பதும் உறுதியன்மையாலும், கருவிலேயே இறந்து சாப்பிள்ளையும் வெளிப்படுவதனாலும், கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு, முக்கால் நூற்றாண்டு, நூற்றாண்டு முதலிய பல்லாண்டு வாழ்வுகள் மட்டுமன்றி, பிறந்த நாளும் ஆண்டு நிறைவு நாட்களும் பெரும்பாலும் செல்வப் பெற்றோரால் அல்லது உற்றோராற் கொண்டாடப் படுகின்றன.

     குழவியோ பிள்ளையோ இளந்தையரோ வளர்ச்சி முற்றிய ஆளோ சேதமின்றிக் காக்கப்பட்டு வந்தமைபற்றி, இறைவனுக்கு நன்றி யொடு காணிக்கை செலுத்துவதும், இயன்றளவு பணஞ் செலவிட்டு உற்றார் உறவினருடன் உண்டாடி மகிழ்வதும், இக் கொண்டாட்டங்களின் நோக்கமாகும்.

     அரசன் அல்லது அரசி பிறந்தநாள் ஆட்டை விழா, நாண் மங்கலம் என்றும், வெள்ளணி விழா என்றும் சொல்லப்பெறும்.

     மேனாடுகளில் தோன்றிய கால் நூற்றாண்டு விழா வெள்ளிவிழா (Silver Jubilee) என்றும், அரை நூற்றாண்டு விழா பொன் விழா (Golden Jubilee) என்றும், முக்கால் நூற்றாண்டு விழா ஒள்ளி விழா (Platinum Jubilee) என்றும் பெயர் பெற்றுள்ளன. ஒள்ளி விழாவை முத்து விழா என்றும் வழங்கலாம்.

     அரை நூற்றாண்டிற்கும், முக்கால் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட அறுபான் ஆண்டு விழா வயிர விழா (Diamond Jubilee) எனப்படும். விகுத்தோரியா (Victoria) அரசியார் ஆட்சியின் அறுபான் ஆட்டை விழா 1897-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. வயிர விழாவை மணிவிழா என்றுங் கூறலாம்.

     அறுபது நாழிகை ஒரு நாளென்றும், அறுபது நாள் ஒரு பெரும்பொழுது என்றும் காலக் கணிப்புண்மையும் 'அறுபதிற்குமேற் கிறுகிறுப்பு' என்னும்