பக்கம் எண் :

132தமிழ் வளம்

வேற்றுமைத் தொகையாகவும் வருமென்பதும், அது என்பது பெரும்பான்மை உடம்படுமெய் பெற்றும் சிறுபான்மை உகரங் கெட்டும் உயிரொடு புணரு மென்பதும், அறியப்படும்.

  "அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்கு"

(80)

  "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்"

(48)

  "அறத்தா றிதுவென வேண்டா"

(37)

  "ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்"

(1330)

என்னும் திருக்குறளடிகள், செய்யுளில் உயிர்முதற் சொன்முன் தளைக் கேற்றவாறு அஃது, அது என்னும் இரண்டனுள் ஒன்று வரும் என்பதை உணர்த்தும்.
  "யாதென் இறுதியும் சுட்டுமுத லாகிய
ஆய்த விறுதியும் அன்னொடு சிவணும்
ஆய்தங் கெடுதல் ஆவயி னான."

(200)

  "யாதென் இறுதியும் சுட்டுமுத லாகிய
ஆய்த விறுதியும் உருபியல் நிலையும்".

(422)

என்னும் தொல்காப்பிய நூற்பாக்கள், அஃது என்பது வேற்றுமை விரியாய் வராதென்பதை நேரல் வழியாய் உணர்த்தும்.

     இங்கு அஃது என்னும் சொற்குக் கூறியது இஃது, உஃது என்பவற் றிற்கும், அது என்னும் சொற்குக் கூறியது இது, உது என்பவற்றிற்கும், ஒக்கும் என அறிக.
     வேண்டும், வேண்டாம், வேண்டா.
     தமிழ்மொழி முழுவளர்ச்சி யடையாதிருந்த காலத்தில், செய்து, செய்கின்று, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைச்சொற்களே பண்டைச் சேர நாடாகிய மலையாளத்திற்போல் முறையே முக்காலமும் பற்றிய முற்றுக்களா யிருந்துவந்தன. அவை பாலீறுபெற்று இற்றை வடிவுற்றபின், இடைக்காலத்தில் செய்கின்றான் என்னும் வாய்பாடு யாது கரணியம் பற்றியோ செய்யுள் வழக்கற்றுப்போய், அதற்கீடாகச் செய்யும் என்னும் வாய்பாடே நிகழ்கால வினையாய் வழங்கி வந்திருக் கின்றது. இலக்கண வுரையாசிரியர் அதன் குறைபாட்டை நீக்கச்செய்யா நின்றான் என்றொரு வாய்பாட்டைப் படைத் திருக்கின்றனர். இதை வீரசோழியமும் அதற்குப் பிற்பட்ட நூல்களுமே ஒப்புக்கொண்டுள்ளன.
     செய்யும் என்னும் முற்று, இறுதியில் பலர்பாலொழிந்த படர்க்கை நாற்பாற்கே வரையறுக்கப்பட் டிருந்திருக்கின்றது. இதை,
  "பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா."

(வினையியல், 30)

என்னும் தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கும்.