| முகவை ஆடல் வல்லான் | | * தாங்கள் 'Viceroy' என்பதற்குப் 'பதிலரையர்' எனத் தமிழாக்கியுள்ளீர்கள். அதேபோல், 'doyen of art' எனுஞ் சொற்றொடர்ப் பொருளை உன்னிய ஞான்று, 'doyen என்றால் 'மூத்த' என்னும் பொருளை அப்பாத்துரையார் அகர வரிசை தருகின்றது. எனவே, doyen என்பதை 'மூதரையர்' என்று கொள்ளலாமா? | | Doyen என்பதை மூதாளர் என்று மொழி பெயர்க்கலாம். | | * ஏரணத்திற்கு (Logic) ஆங்கிலம்கூட ஏற்றதாயில்லை என்று ணர்ந்து 'log lang' எனும் மொழியை உருவாக்கினர். இதற்கு உலக மொழிகளில் உள்ள நயம், ஏரணத்திறங்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் தமிழ் விடுபட்டுள்ளது. ஒருவேளை, தமிழ்த்திறம் அறிந்தால் இப் புதிய மொழிக் கண்டுபிடிப்பு தேவையில்லை என்று கருதுகிறேன். இது சரியா? | | தமிழ் இயன் மொழி; தொன் மொழி; குமரிக் கண்டச் சிறப்புச் சொற்களையும் தனித்தமிழிலக்கியப் பெருஞ் செல்வத்தையும் இழந்த மொழி: ஆரியம் திரிமொழி: பின்மொழி; பன்னூற்றாண்டாகப் பல்வேறு அறிவியல் நூல்களை ஆக்கிக்கொண்ட மொழி. இவ் விரண்டிற்கும் மெல்லாடைக்கும் வன்கம்பளிக்கும் போற் பொருத்தமில்லை. | | மு. ஆனந்தராசன், பெல்காம். | | * கற்பின் தெய்வம் நம் கண்ணகி நகரறிய நகிலைத் திருகி வட்டித் தெறிந்தமை, அவட்கும் அவளொத்த நாணுடை நங்கையர்க்கும் நற்செயலாகுமோ? 'இந் நகர் தீயுண்க!' என நவிலத்தகும் நாச்சொல் ஒன்றே கற்பின் நல்லாளாகிய கண்ணகிக்குச் சாலாதோ? | | கற்புடை மகளிர் பெருஞ் சினத்தில் நகிலைத் திருகி யெறிவ தென்பது சிலப்பதிகாரம் தவிர வேறெத் தமிழ் நூலிலும் சொல்லப் படவில்லை. | | | "நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள்................." | (278) | | என்னும் புறச் செய்யுள் போன்றவற்றில், போர்க்களத்திற் புறங்கொடுத் தோடியவன் உண்ட நகிலைத் தாய் வாளால் அறுத்தெறியும் செய்தியே சொல்லப்படுகின்றது. மேலும், நகிலைக் கையால் திருகிப் பிடுங்க வியலுமோ வென்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி. கண்ணகி தன் நகிலைக் கையாற் பறித்தெறிவது போற் சைகை மட்டுங் காட்டித் தன் பெருஞ் சினத்தைக் குறிப்பித்திருக்கலாம். ஊரை யெரியுண்ணச் சாவித்தற்குச் சொல்லே போதும். அவள் மெய்யாய்த் தன் | | |
|
|