| நகிலைத் திருகியெறிந்திருப்பின், அதனால் ஏற்பட்டிருக்கும் புண்ணைப் பதினான்கு நாள் எங்ஙனம் தாங்கியிருக்கவும், அதன் நோவொடு சேரநாட்டு நெடுவேள் குன்றம் சென்றேறியிருக்கவும், முடியும்? அவள் கற்பும் சினமும் மருத்துவத்திற்கு இடந் தந்திருக்காதென்பது தேற்றம். | | இனி, அவள் நெடுவேள் குன்றம் ஏறி விழுந்திறந்தபோது ஒரு முலை சேதப்பட்டுப் போயிற்றென்று கொள்ளலுமொன்று. | | சு. ஆறுமுகம், அருப்புக்கோட்டை. | | * "The more popular word in Tamil derived from Acarya is Asiriyer" என்று பர். எஸ். கே. நாயர் என்பவர் 'பேராசிரியர் இரா. பி. சேது' மலரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எம் ஆசிரியர், ஆசிரியர் எனுஞ் சொல்லை ஆசு + இரியர் என்று பிரித்துக் காட்டிக் கற்பித்துள் ளார். எந்த முடிவு ஏற்புடைத்து? | | ஆசிரியன் என்னும் சொல்லை ஆசு + இரியன் என்று பிரிப்பதே ஏற்புடைத்து. சேதுப் பிள்ளை நினைவு மலர்க் கட்டுரை யாசிரியரெல் லாரும் மொழிநூற் பேரறிஞரல்லர். | | அறிவன், பறம்புக்குடி. | | * தமிழிற் புலமைபெற முறையாகப் பயிலவேண்டிய நூற்கள் யாவை? | | மறைமலையடிகளின் உரைநடை நூல்கள், தனிப்பாடற் றிரட்டு, நாலடியார், திருக்குறள், திருக்கோவை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களை மறைமலையடிகள் வழித் தமிழாசிரியர் பாற் கற்க. | | இரா. பாலகிருட்டிணன், மதுரை. | | * தமிழ் மொழியில் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவையா? ஆம் எனில் அது எவ்வாறு ஆக்கவேண்டும்? | | ஈ என்னும் எழுத்தை முன்போல் ' ' என்னுங் குறியாற் குறிக்கலாம், ஒள, கௌ முதலிய ஒளகார எழுத்துகளின் 'ள' என்னும் துணைவரியை, ளகர வடிவினின்றும் பிரித்தறிதற் பொருட்டுச் சற்றுச் சிறிதாக்கல் வேண்டும். இவை தவிர வேறு திருத்தம் வேண்டியதில்லை. | | நை. கு. குப்புசாமி, சேலம். | | * இன்று சிறந்ததாகக் கருதப்பட்டுவரும் பண்டைக் காலத் தமிழ்ச் சுவடிகளைத் தேடினால் இன்னும் அவற்றில் சிலவேனும் கிடைக்கப் பெறுவோமா? தற்போது (உ.வே.சா.விற்குப் பிறகு) பழைய நூல்களைத் தேடுவதில் ஈடுபட்டுள்ள தமிழறிஞர்கள் யாவர்? | | இன்றைத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலையாள நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் தேடினால், ஏதேனும் யாங்கேனும் பழந்தமிழ்ச் சுவடி கிடைக்கலாம். மேனாடுகளிலும் தேடிற் கிடைக்கும். எனக்குத் தெரிந்தவரை, பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவதில் ஈடுபட்டுள்ள வர் இன்று ஒருவருமில்லை. | | |
|
|