பக்கம் எண் :

கேள்விச் செல்வம்145

பெ. கிருட்டிணசாமி, சென்னப்பநாயக்கன்பாளையம்.
     * தென்னாற்காடு, தென்னார்க்காடு இவற்றில் எது சரி? ஏன்?
     'தென்னார்க்காடு' என்பதே சரி. இங்ஙனம் 'வடார்க்காடு' அல்லது 'வடவார்க்காடு' என்பதும். ஆர்க்காடு என்னும் ஊராற் பெயர் பெற்றி ருந்த ஒரு பெருமாவட்டம் பின்பு வடக்கும் தெற்குமாக இரு மாவட்டங்க ளாகப் பிரிக்கப்பட்டது.
     ஆர்க்காடு என்னும் ஊர் வேலூர் வட்டத்தைச் சேர்ந்தது; மிகப் பழமை யானது. "அழிசி யார்க்காடு" என்று குறுந்தொகையிலும் (258), "அரியலங் கழனி யார்க்காடு" என்று நற்றிணையிலும் (190), வந்துள்ளது. ஆர் = ஆத்தி. ஆர்க்காடு= ஆத்திக்காடு. இச் சொல்லைப் புராணிகர் ஆறுகாடு என்று பிறழக் கொண்டு, வடமொழியிலும் சடாரணியம் என்று மொழிபெயர்த்து விட்டனர். ஷட் = ஆறு. ஆரணியம் = காடு.
தாயம்மை, சேலம் 9.
     * கடல்கோளால் அழிந்த இலக்கிய நூல்களுள் "பண்ணத்தி" என்பதுவும் ஒன்று எனப்படுகிறது. அந் நூல் பற்றிய விளக்கங்கள் கிடைக்குமாயின் அருள்கூர்ந்து தெரிவியுங்கள்.
     "பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டி னியல பண்ணத்தி யியல்பே."

(1436)

என்பது தொல்காப்பிய நூற்பா.
     "பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு..... அவையாவன: நாடகச் செய்யுளாகிய பாட்டு மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப்பாட்டும் கட்கண்டும் முதலாயின........ அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க" என்பது பேராசிரியர் உரை.
     காலஞ் சென்ற பண்டாரகர் (Dr.) பெரும் பேராசிரியர் (மஹா மஹோபாத்தியாய) உ.வே. சாமிநாதையர் அவர்கள் பண்ணத்தியை நாடோடிப் பாட்டென்றார்கள். அவர்கள் நாடோடிப் பாட்டென்றது நாட்டுப்புறப் பாட்டை.
     பண்ணத்தியென்பது, இந்துத்தானிப் பாட்டுகளில் வரும் தொகைய ராவாயிருக்கலாம்.
     * "பாவம்" "பாவி" என்பன தமிழ்ச் சொற்கள்தாமா?
     'பாவம்' 'பாவி' என்பன வடசொற்கள். அறங்கடை, கரிசு, தீவினை என்பன பாவத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.
     * "குணகுணி சம்பந்தம்" (மறை - திருநாவுக்கரசு எழுதிய மறைமலை அடிகள் வரலாறு 64ஆம் பக்கம்) என்ற விளக்கத்தின்படி நல்லறிஞர் அழகிய தோற்றங்களில் விளங்க வேண்டியிருக்க, சாக்ரடீசு, ஆபிரகாம் லிங்கன் ஆகிய சிறந்த அறிஞர் அழகற்ற தோற்றம் பெற்றி ருந்ததேன்?