பக்கம் எண் :

146தமிழ் வளம்

     அகத்தழகும் முகத்தழகும் என்றும் ஒத்திருக்கவேண்டும் என்பது இயற்கை நெறியன்று. ஒட்டுமாவையும் கூட்டுமாவென்னும் கொட்டை மாவையும் ஒப்பு நோக்கிக் காண்க.
க. பழனியப்பன், பொன்மலை, திருச்சி - 4.
     * தமிழில் பன்னெடுங்காலமாக விரவி வழங்கிவரும் வடமொழி (ஆரிய எழுத்துகளான ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ என்ற) எழுத்துகள் வட மொழியில் வேறு வடிவம் பெற்றிருக்கத் தமிழில், ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ என்ற வடிவம் வந்தது எவ்வாறு? எப்பொழுது? ஏன்?
     ஆரியர் தென்னாட்டிற்கு வந்த பின்னரே தமிழ் நெடுங்கணக்கை யொட்டிக் கிரந்தாட்சரம் என்னும் ஆரிய வெழுத்துகளை அமைத்துக் கொண்டனர். அக் காலம் கி.மு. ஏறத்தாழ 1500. க + ஷ = க்ஷ.
     * கல்லூரிகளில் அனைத்தும் தமிழ்ப் பயிற்றுமொழி ஏற்படுத்து வதுபற்றித் தங்கள் கருத்தென்ன? அறிவியல் நூல்கள் தமிழில் போதுமான அளவு இல்லாதிருக்க, மாணவர்கள் அவற்றைத் தமிழில் படித்து எங்ஙனம் மேலை நாட்டு அறிவியல் அறிஞர்களுக்கு நிகராக விளங்க முடியும்?
     இவ் வினாவிற்கு விடை ஏற்கனவே எழுதப்பெற்றுளது. முந்திய வினா விடை மாலைகளைக் காண்க.
ந. தட்சு, மணலூர்.    
     * முகத்தைக் குறிக்கும்போது "மூஞ்சி" என்றும் சொல்கிறோம். இவை இரண்டும் தமிழ்ச் சொற்கள்தாமா? விளக்க வேண்டுகிறேன்.    
     'முகம்' 'மூஞ்சி' இரண்டும் தமிழ்ச் சொற்களே.
     முகம் மக்களது; மூஞ்சி (Muzzle) விலங்குகளது.
     முகம் என்னும் சொல் வரலாற்றைத் தமிழ்ப்பொழிலிற் காண்க.
     மூசு - மூஞ்சு - மூஞ்சி. மூசுதல் - மூச்சுவிடுதல், மூசு - மூச்சு.
     * "பிறகு" என்பதற்கு 'மல்லாக்க', என்றும் 'பொறக்கி' என்றும் சொல்லி வருகின்றனர். அவை எந்தச் சொற்களின் திரிவு?
     மல் - மல்லா - மல்லாக்க. மல்லாத்தல் - மலர்தல். பிறகு - புறகு - புறகே - புறகேக்கு - புறகைக்கு - புறைக்கு.
கோவி. க. வேலன், தஞ்சை.
     * இப்பொழுது புத்தாண்டு என்று சித்திரை முதல்நாளக் கொண்டாடுகிறார்களே, இது உண்மையில் தமிழ்ப் புத்தாண்டா? ஆம் எனின் எதன் அடிப்படையில் இதை வகுத்தனர்?
     தமிழாண்டு என்று தொடங்குவதென்பதுதிட்டமாய்த் தெரிய வில்லை. அறுவகைப் பெரும்பொழுதுகளுள் (பருவங்களுள்) இள வேனில் சிறந்ததென்னும் இலக்கிய அடிப்படையில் தமிழாண்டு சித்திரையென்னும் மேழ மாதத்தில் தொடங்கியது போலும்!