யெனப் பகுத்து, நிலைமொழியீறு கெட்டு வருமொழி முதல் வலிமிக்க புணர்ச்சியாகக் கொள்வதே தக்கதாம் எனவும் அறிக. |
இத்தகைய மறுப்பெல்லாம், இனிவரும் உருப்படிகளில் திருத்தம் என்னும் தலைப்பின் கீழேயே குறிக்கப்படும். |
மெய்யெழுத்துச் சாரியை. ஒரு சொல்லாக்க ஈறு, சிலபெயர்களின் ஆகார வீற்றுக் குறுக்கம், வண்ணக் குழிப்பு வாய்பாட்டீறு, நெடுங் கணக்குப் பெயருறுப்பு என்னும் ஐம்பொருளும் சென்னை யகர முதலியிற் குறிக்கப் பெறவில்லை. |
2. அவரை |
அவரை avarai. வழங்கும் இடம் - தமிழகம். |
சொல் வகை : அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர். |
இயல் விளக்கம் - பெரும்பான்மை பச்சை நிறமும் சிறுபான்மை வெண்ணிறமும் செந்நிறமுள்ளதும், பெரும்பாலும் தட்டை வடிவானதும், இரு விரலம் (inches) முதல் அறுவிரலம் வரை நீண்டு பல வகைப்பட்டி ருப்பதும், வீட்டுப் புறங்களில் விளைவிக்கப்படுவதும், நளி (கார்த்திகை) சிலை (மார்கழி) சுறவ (தை) மாதங்களில் ஊர் கொடியாகவும் (creeper) சிறப்பாக இவர் கொடியாகவும் (climber) படர்கொடியிற் காய்ப்பதும் கறி வகையாகச் சமைக்கப் படுவதும் உடல் நலத்திற்கேற்றதும், சுவையுள் ளதுமான காய் வகை a kind of bean including many varieties. |
மறுபெயர்களும் வழங்கும் இடமும்: |
முதிரை (ப.கு.சி.), சிக்கடி (பிங்.), இவ்விரு பெயரும் இலக்கிய வழக்கு. முதிரை என்பது துவரையையுங் குறிக்கும். |
| "கங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும் பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர் - தங்களுக்கும் கண்முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் காழுறையா வெண்முதிரைப் பிஞ்சாம் விதி." | |
|
|
(ப.கு.சி. 697) |
இதன் பொருள் - விதை முதிராத வெள்ளையவரைப் பிஞ்சு, இரா வுணவிற்கும் மருந்துண்பவர்க்கும் ஊதை (வாதம்) முதலிய முந்நாடிக் குற்றம், புண், காய்ச்சல் விழிக்குள் முதிர்ந்த கோழைப் பில்லம் ஆகிய நோயுடையார்க்கும் நல்லதாம். |
வேற்றுமைப்பாடு. முதல்வகை. எ-டு : அவரையை, அவரையால், அவரைக்கு, அவரையின், அவரையது, அவரையில். |
பழமொழி : |
| 'அவரை போட்டால் துவரை முளைக்குமா?' 'ஆடி மாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய்.' |