எந்த மொழியிலேனும், கல்வி வேறு ஆராய்ச்சி வேறு என்பதை முதற்கண் அறிதல் வேண்டும். கல்வி எத்தனை துறைப்பட்டதோ அத்தனை துறைப்பட்டது ஆராய்ச்சியும். பலர் கற்றுத் தேர்வெழுதியோ ஆராய்ந்து இடுநூல் (thesis) விடுத்தோ ஒரே வகையான அல்லது பெயருள்ள பட்டம் பெறினும், அவர் அறிவு அல்லது புலமை ஒன்றாக அல்லது பொதுவாக இராது; அவர் கற்ற அல்லது ஆராய்ந்த துறைக்குத் தக்கவாறு வேறுபட்டுச் சிறப்பாகவே யிருக்கும். ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில், பல ஆசிரியர் இளங்கலைப் (B.A.) பட்டமோ முதுகலைப் (M.A.) பட்டமோ பெற்றவராயிருக்கலாம். ஆயின், அவரெல்லாரும் ஒரே பாடங் கற்பிக்குந் திறமையுள்ளவராய் ஒருதிறப்பட்டிராது. பல்வேறு பாடங் கற்பிக்குந் திறமையராய்ப் பல்திறப் பட்டிருப்பர். வரலாற்றுப் பட்டந் தாங்கியார் கணிதமும், கணிதப் பட்டந் தாங்கியார் அறிவியலும், கற்பிக்க முடியாது. அங்ஙனமே, பண்டாரகர்ப் (Dr) பட்டந்தாங்கியாரும் தத்தம் ஆராய்ச்சித் துறையிலேயே அறிவும் ஆற்றலும் உடையவராயிருப்பர். |