பக்கம் எண் :

60தமிழ் வளம்

    

6.

எல்லாச் சொற்கட்கும் இயன்றவரை திரவிட ஆரிய இனச் சொற்கள் (Cognates) காட்டுவது,

    

7.

எல்லாச் சொற்கட்கும் இயன்றவரை வேருடன் கூடிய வரலாறு வரைவது.

    

8.

ஏனை யகரமுதலிகளிற் குறிக்கப்பட்டுள்ள தவறான மூலம் திருத்துவது.

     சொற்பொருளும் மூலத்திருத்தமும் தெளிவாக விளக்கப்படுமிட மெல்லாம், இவ் வகரமுதலி அரைக் கலைக்களஞ்சிய முறையில் விரிவாக விருக்குமாதலாலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறிமுறைகள் (Principles of Tamil Etymology), தமிழகரமுதலி வரலாறு (History of Tamil Lexicography) என்னும் இரண்டொடு கூடி 13 மடலங்கள் வெளி வருமாதலாலும், எத்துணை விரைவாக வேலை நடப்பினும், முழு வகர முதலியும் முடிய, அல்லது வெளிவர இன்னும் பத்தாண்டு செல்லும்.

     ஆயின், இதன் முதன் மடலம் முதற் பகுதி இவ்வாண்டிற்குள் வெளிவரும். அதுவே, தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழியென் பதைப் பகைவரும் ஒப்புக்கொள்ளுமாறு, ஐயந் திரிபற நாட்டிவிடும்.

     தொடக்க முதலீடாக ஈரிலக்கமே யொதுக்கப்பட்டுள்ள இவ் வகர முதலித் திட்டத்தின்கீழ் இருவரையே துணைக்கொண்டு, என் சொந்தப் பொத்தகங் களையே, பெரும்பாலும் பயன்படுத்தி, இயன்றவரை ஒழுங்காகச் செய்துவரும் இப்பணி, இனி நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்து, நெருக்கடி நிலையில் இழக்கப்பட்ட அனைத்துரிமையும் மீண்டுள்ள இம் மக்கள் (Janata) கட்சி ஆட்சியில், குறித்த கால வெல்லையில் முற்றுப்பெறும் என நம்புகின்றேன்.