பக்கம் எண் :

63

     5
உலகத் தமிழ்க் கழகக் கொள்கை

     உலகத் தமிழ்க் கழகம் தோன்றி ஒன்றரை யாண்டிற்கு மேலாகியும், இன்னும் அதன் கொள்கையைப் பலர் செவ்வையாக அறியாதிருப்பதால், அவர்க்கு அதை அறிவித்தற்பொருட்டு இக் கட்டுரையை எழுதலானேன்.

     பல்லாயிரம் ஆண்டுகளாகப் புறப்பகைவரான ஆரியராலும் அகப்பகைவ ரான போலித் தமிழராலும், மறையுண்டும் குறையுண்டும் போற்றுவாருந் தேற்றுவாருமின்றிப் புன்சிறு கலவை மொழிபோற் புறக் கணிக்கப்பட்டுக் கிடந்த முதுகுமரி முத்தமிழை, நிறைபுலமுடியாம் மறைமலையடிகளைப் பின்பற்றி, உலகமுதல் உயர்தனிச் செம்மொழியென மீண்டும் உலகெலாம் உலவிவரச் செய்து பண்டையரியணை யேற்றுவதே, உலகத் தமிழ்க் கழகத்தின் ஒருபெரு நோக்கமாம்.

     பண்பாடு சிறிதுமின்றிப் பட்டம் பதவியே பற்றிக் கட்சித் தலைவர் காலில் விழுவதும், இறைவன் பொருள்சேர் புகழை இற்றை யமைச்சர்க்கு ஏற்றிக் கூறுவதும், தந்நலமொன்றே கருதித் தாய்மொழியைப் புறக்கணிப் பதும், தனித்தமிழ்ப் பற்றற்றவரைத் தலைமையாகப் போற்றுவதும், எத்துணை கற்பினும் தெள்ளியராகாது என்றும் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொள்வதும், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரின் தகுதியை நோக்காமையும், மாபெரும் தமிழ்மலையாம் மறைமலை யடிகளை மறைக்க முயல்வதும், அறிஞர் ஆய்ந்து கண்ட உண்மைகளை ஒப்புக்கொள்ளாது தான் பிடித்த முயற்கு மூன்றே காலென வலிப்பதும், பொன்னைப் பித்தளையென்றும் பித்தளையைப் பொன்னென்றும் திரிபுணர்ச்சியைப் பரப்புவதும், இந்தியால் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடென வறிந்தும் அதை விலக்காது "எங்கெழிலென் ஞாயிறெமக்கு" என்றிருப்பதும், உலகத் தமிழ்க் கழகக் கொள்கை யல்ல.

     "காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்பது போல, கட்சிப்பற்றாளர்க்குக் கட்சிக்காரர் செய்வதெல்லாம் புன்செயலும் வன்செயலுமா யிருப்பினும், கண்ணியமும் கட்டாண்மையுமாகவே தோன்றும். யானையைத் தடவிக்கண்ட நாற்குருடர் தாங்கண்டவாறே பிறருங் காண்பரென்று கருதிக் கொண்டதுபோல, ஒரு பொருளைப் பற்றித் தாங்கொண்ட கருத்தே பிறருங் கொள்வரென்று கருதிக்கொள் வது கட்சிக்காரர் இயல்பு. தந்நலமன்றி ஒரு கொள்கையுமற்ற போலித் தமிழர் உயரிய கொள்கையுடைய உலகத் தமிழ்க் கழகத்தைக் கொள்கை யில்லாததென்று கூறுவது, கடுகளவும் மொழியறிவும் தாய்மொழிப் பற்றுமில்லாப் பேராயத்தார் மறைமலையடிகளையும் அவர்கள் வழிச் செல்வோரையும் அறிவிலிகள் என்று பழிப்ப தொத்ததே.