ஒரு நாடு முன்னேறும் வழி அதன் மொழியே. பிராமணர் தென்னாடு வந்தநாள் தொடங்கி, திட்டமிட்டுக் கட்டுப்பாடாகத் தமிழைக் குலைத்து வந்திருக்கின்றனர். தமிழ் தாழ்ந்து விட்டதனால் தமிழனுந் தாழ்ந்து கெட்டான். தமிழும் தமிழனும் தலையெடுக்காவாறு பிராமணர் இறுதியாகச் செய்த பெருமுயற்சி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலித் தொகுப்பாகும். அதில், தமிழ், வடமொழியென்னும் சமற் கிருதக்கிளையென்றும், பன்மொழிக் கலவை யென்றும் காட்டப்பட்டுள் ளது. அதையே மேனாட்டார் நம்பித் தமிழையும், தமிழரையும் தாழ் வாகக் கருதுகின்றனர். அவ்வகரமுதலி திருத்தப் பெறும்வரை, தமிழன் முன்னேற வழியில்லை. |
அதைத் திருத்தற்கும் தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்டற்குமே அரை நூற்றாண்டாக அல்லும் பகலும் ஆயிரக்கணக்கான நூல்களைக் கற்றாய்ந்தேன். பேராயக் கட்சியாட்சியில் என் தொண்டிற்கு எள்ளளவும் இடமில்லாது போயிற்று. இன்று தி.மு.க. ஆட்சியிலேனும், தமிழுக்கு நற்காலம் பிறக்காதா என ஆவலாக எதிர் நோக்குங்கால், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த ஒரு பேராசிரியரைத் தலைவராகவும், சென்னையிலுள்ள நாற்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரையும், ஓர் ஓய்வு பெற்ற உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியரான பெரும் புலவரையும், உறுப்பினராகவும் கொண்ட ஒரு தகுதியற்ற குழு, என்னையன்றி வேறெவருஞ் செய்யமுடியாத சென்னைத் தமிழகரமுதலித் திருத்தத்திற் கமர்த்தப்பட்டு ஓராண்டாக ஏதோ செய்து வருவது, எள்ளி நகையாடத் தக்கதும், பொதுப் பணத்தைப் பாழாக்கும் வீண் செயலுமாகும். தமிழன்பர் செய்த தவப்பயனாகத் 'தென்மொழி'யாசிரியர் பெருஞ்சித்திரனார், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி யுருவாக்கவும் வெளியிடவும் திட்டம் வகுத்து விட்டதனாலும், அவ் வகரமுதலி, பொருளகர முதலியும் சொற் பிறப்பியல் அகரமுதலியும் சென்னையகர முதலித் திருத்த அகரமுதலியுமாக மும்மடி யகரமுதலியாக வெளிவர விருப்பதனாலும், மேற்குறித்த சென்னைக் குழுவை உடனே கலைத்து விடுமாறு உ.த.க.கிளைகள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசிற்கும், சென்னைப் பல்கலைக்கழகத் துணைத் தலைவர்க்கும் வேண்டுகோள் விடுப்பதுடன், எனக்கும் ஒவ்வொருபடி அனுப்பி வைக்க. |