பக்கம் எண் :

71

9
உ.த.க. மாவட்ட அமைப்பாளர்க்குஉடனடி வியங்கோள்

     தமிழ் உலக முழுதுந் தழுவிய ஒரு தனி முழுமுதற் செம்மொழி யாதலின், அதன் ஆரிய மாசுகளைந்து சீரிய நிலைமை காக்க மாபெருந் தமிழ் மலையாம் மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நல்லிசைப் புலவரும் ஆன்றவிந்தடங்கிய சான்றோரும் பண்பட்ட தமிழ் மக்களுமே கடைப்பிடித்தற்குரிய விழுமிய கொள்கைத்தாம். ஆதலால், கொண்டதுவிடாத குறடும் பேதையும் போன்ற கட்சி வெறிய ரும் காக்கரும் போக்கரும் அதிற் சேரத்தக்கா ரல்லர்.
     கொடுந் தமிழுங் கொச்சைத் தமிழுமாய்த் திரிந்து ஆரியமுங் கலந்து, தென்மொழித் தன்மை பெரிதும் மாறிய திரவிடம் வேறு; எண்ணிற்கெட்டாத் தொன்மையில் தன்னந்தனியாகத் தோன்றிய தூய்மையுங் கன்னித் தன்மையும் பேணித் தென்னவர் வளர்த்த தீந்தமிழ் வேறு. அதனால் தமிழுக்கும் திரவிடத்திற்கும் வேறுபாடறியாத ஒரு குழு அல்லது கூட்டம் தமிழைக் காக்கவோ, வளர்க்கவோ முடியாது. இதை நடைமுறையிற் கண்ட பின்னரே உ.த.க. தோற்றுவிக்கப்பெற்றது.

     இலக்கணமும் மொழிநூலும் சிறப்பக் கற்றாய்ந்த அறிவுடையாரே, மறைமலையடிகளின் பெருமையை அறியவல்லார்.

 

"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே
பாம்பறியும் பாம்பின கால்"                         (பழமொழி: 7)

     மறைமலையடிகளே தமிழ்; தமிழே மறைமலையடிகள் என்று புனையினும் பொருந்தும். ஆதலால், அவர் படிமையை நிறுவுவது தமிழை நிறுவுவது போன்றதே.
     உலக மென்பது உயர்ந்தோர் மேற்றே. உலகத்தில் வாழும் மாந்த (human) வடிவுகளெல்லாம் உலகமெனப்படா. கொச்சை மாந்தரும் உலகமாயின், கொச்சைத் தமிழை விலக்க ஏது விராது.

     குருடர்க்கு யானை துடைப்பக்கட்டை யளவிலும் தூணளவிலும் தோன்றியது போல, குன்றிய அறிவுடையர்க்குக் குன்றின் அளவினரும் குன்றிமணியளவிலேயே தோன்றுவர்.