சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி தமிழ் சமற்கிருதக் கிளை மொழி என்னும் முடிவுதோன்றப் பிராமணரால் தொகுக்கப்பட்டி ருப்பதை அறிந்தும், தி.மு.க. ஆட்சி அதைத் திருத்துவதற்குத் தினையளவும் முயற்சி செய்யவில்லை. இந் நிலைமையில் தமிழர் எங்ஙனம் முன்னேற முடியும்? இந்தியை எங்ஙன் ஒழிக்க வியலும்? |
திருவள்ளுவர் ஈராயிரமாண்டு நிறைவு விழா |
திருவள்ளுவர் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுவரை செல்லுதற்கிட முண்டேனும், கி. மு. 2ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதன்று என்பது முடிந்த முடிபாம். அம் முடிபுப்படி, சென்ற நூற்றாண்டிலேயே திருவள்ளுவர் ஈராயிர வாட்டை விழாவைக் கொண்டாடியிருத்தல் வேண்டும். ஆயின், அன்று தமிழகம் விழிப்புறாமையால் அது தவறிவிட்டது. எனினும், செய்ய வேண்டு வதைச் செய்யாமையினும் பிந்திச்செய்வது மேலாதலால், இந் நூற்றாண்டி லேனும் நாம் கொண்டாட நேர்ந்ததுபற்றி மகிழ்வுற வேண்டும். |
திருவள்ளுவர் காலம் கி. மு. 2ஆம் நூற்றாண்டென்று முடிவு செய்யப் பெற்றிருப்பினும், மறைமலையடிகளின் மாபெரு மாண்பு நோக்கியும் அவர் கள் வகுத்த தொடராண்டு வழக்கூன்றியமை பற்றியும், அதை மாற்றாதி ருப்பதே தக்கதாம். |
திருவள்ளுவர் விழாவைப் பழைய முறைப்படி மேழ (சித்திரை) மாதத்திற் சிலரும், புதிய முறைப்படி சுறவ (தை) மாதத்தில் சிலரும், திருவள்ளுவர் மறைந்தநாட் கொள்கைப்படி கும்ப (மாசி) மாதத்தில் சிலரும், கொண்டாடலாம். உலகத் தமிழ்க் கழகக் கிளைகள் தம் ஏந்தும் (வசதியும்) விருப்பமும்பற்றி எம் மாதத்திலும் கொண்டாடுக. |
ஆயின், உ.த.க சார்பான பொதுவிழா, அச்சிலிருக்கும் திருக்குறள் தமிழ் மரபுரைஅச்சானவுடன் அதன் வெளியீட்டுவிழாவொடும் கழக ஆட்டை விழாவொடும் சேர்ந்தே. மதுரையிலேனும் திருப்பாதிரிப்புலியூரிலேனும் நடைபெறும். அதன் விளத்தமான அறிவிப்பு விடைமாதத் 'தென்மொழி'யில் வெளிவரும். |
திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாவைக் கொண்டாடுவோர் விளம்பர நோக்கும் வணிகநோக்குமின்றி உண்மையான முறையிற் கொண்டாடுவதே, திருவள்ளுவர் பெருமைக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற் கும் ஏற்றதாகும். ஒரு நாளைக்கு ஒரு குறள் மேனியோ குறள் முழுதுமோ குருட்டுத்தனமாகப் பொறிவினை முறையில் உருப்போடுவதும், ஓரறிவுயிரு மற்ற சுவர்களில் எழுதி வைப்பதும், திருவள்ளுவர் கருத்திற் கேற்றவையல்ல. அதனால், அங்ஙனஞ் செய்பவர்க்கும் வீண்முயற்சியன்றி மறுமைக்கேற்ப ஒரு பயனும் விளையாது, ஏமாற்று வினைப்பயன் இம்மையிலும் நீடிக்காது. |
குல மத கட்சி வேறுபாடின்றித் தமிழர் அனைவரும் ஓரினமாக ஒன்றுபடுவதும், தமிழ்ப்பெயரே தாங்குவதும், தமிழிற் பேசும்போது தூய நடையிலேயே பேசுவதும். தம்மாலியன்றவரை பிறருக்கு நன்மை செய்வதும், உள்ளும் புறம்பு மொத்த வாய்மையைப் படிப்படியாகவேனுங் கடைப்பிடிப்ப துமே, திருவள்ளுவர் உள்ளத்திற்கேற்ற செயல்களாம். திருவள்ளுவர் கள் ளுண்டலைக் கண்டிப்பது போன்றே சூதாட்டையுங் கண்டிப்பதால், தனிப்பட்ட வராயினும் அரசினராயினும் சூதாட்டவகையிற் பொருளீட்டாமையும் திருவள்ளுவர் திருவுள்ளத்திற் கேற்றதாம். குறள் நெறியைக் கைக் கொள்ளாதவர் திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடுவது, ஏசுபெருமானைக் குறுக்கையில் (சிலுவையில்) அறைந்தவர் முழங்காற் படியிட்டு அவரை வாழ்த்தி வணங்கிய தொத்ததே. |