பக்கம் எண் :

84தமிழ் வளம்

14
தமிழ்ப் பேராசிரியரின் தவறான
மொழிக் கொள்கை

     ஒரு நாட்டுப் பொதுக்கல்வி, அந்நாட்டு மக்களின் தேவைக்கும் திறமைக்கும் ஏற்ப, ஒருமொழி வாயிலாகவோ இருமொழி வாயிலாகவோ மும்மொழி வாயிலாகவோ அமையும். பண்டைக் காலத்திற் பலநாட்டுக் கல்வி ஒருமொழி வாயிலாகவே யிருந்தது. ஆங்கிலர் வரும்வரை தமிழ் நாட்டிலிருந்தது ஒருமொழி வாயிற் பொதுக் கல்வியே. ஆங்கிலராட்சி யில், தமிழ்நாட்டில் தமிழொடு ஆங்கிலமும் கல்வி வாயிலானது. அஃது ஆளுமினத்தாரின் தாய்மொழி யாயிருந்ததினால் மட்டுமன்று, இன்றும் தமிழிலில்லாததும் மக்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததுமான பல்துறை அறிவியல் இலக்கியத்தைக் கொண்டிருப்பதனாலுமே, நம் அகக் கண்ணைத் தெளிவாக்கிப் பல்வேறு அறிவியற் பாதைகளைக் காட்டி அவற்றில் முன்னேறிச் செல்லவைத்தது ஆங்கில மொழியேயாத லால், அதன்மேற் குறை கூறுவதும் அயன் மொழியெனப் புறக்கணிப் பதும், அறியாமையும் நன்றி கெட்ட செயலுமாகும்.

    

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"                          (குறள். 110)

     இன்றும் அறிவிற் செல்வதற்கு வழிகாட்டியாயிருப்பது ஆங்கி லமே. அதனால் அதனைப் புறக்கணிப்பது தற்கொலைக் கொப்பாகும். ஆகவே, தமிழ், ஆங்கிலம் என்னும் இரண்டும் நம் நாட்டுக் கல்வி வாயிலாயிருத்தல் வேண்டும். ஆயின், இந்தி தமிழர்க்கு எள்ளளவும் வேண்டுவதன்று. அதனால் தீமையேயன்றி நன்மையில்லை, அத் தீமைகளாவன:-

 

(1) தமிழ் மாணவர் தாங்கொணாத வீண் கடுஞ்சுமை.
(2) தமிழர் இந்தியார்க்கு (இந்தி மொழியாளர்க்கு) என்றும் அடிமைப் பட்டிருக்கும் நிலை.
(3) தமிழ் நாளடைவில் ஆரியம் போல் அழிந்தொழிதல்.

     ஆங்கிலம் நமக்கு இறைவனால் அளிக்கப்பெற்ற ஈவேயன்றி, ஆங்கிலராற் சுமத்தப்பட்ட சுமையன்று. இந்தி இந்தியரை ஒற்றுமைப் படுத்தும்; ஆங்கிலம் அவரை இருவேறாக்கும் என்பது, நஞ்சுண்டவன் வாழ்வான், அமுதுண்டவன் மாள்வான்! என்பது போன்றதே. ஆங்கிலம் உலகமொழியாகி விட்டதனால், வடநாட்டுத் தொடர்பிற்கும் அஃ தொன்றே போதும்.