| ஒருதுறையில் அறிஞர் யாரென்று அறிஞர்க்கே அறிய முடியும். "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின் கால்." (7) |
என்பது பழமொழி. |
மாநாட்டிற்குச் சிறப்பாக யார் யாரை அழைக்க வேண்டு மென்பதை அறியா தவர் சிறந்த அறிஞராக இருக்க முடியாது. மலையா நாட்டுத் தலைமையமைச்சர் உயர்திரு. துங்கு அபுதுல் இரகிமான் பொன்னான பண்பு வாய்ந்த பெருமான், உலகெங்கும் இனவெறிப் பேயும் மொழிவெறிப் பேயும் தலைவிரித்தாடும் இக்காலத்தும், தமிழையும் தமிழரையும் அரவணைத்துப் போற்றும் அன்னாரை யாம் நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்துகின்றோம். இறைவன் அவர்க்கும் அவர் குடும்பத்திற்கும் நீடிய வாழ்வும் கூடிய நலமும் அருள்வாராக. |
மாநாட்டின் விளைவை ஆய்ந்தோய்ந்து பார்க்கின், அது திரு. தனிநாயகத்தின் விளம்பரமாகவே முடியும் எனத் தோன்றுகின்றது. ஆதலால் மலையாத் தமிழ் மக்கள் இதுபற்றி மிக விழிப்பாயிருக்க வேண்டுகின்றோம். அமைதிப் பெருங்கடலில் வாரியிறைக்கப்பட விருக்கும் இலக்கக்கணக்கான வெள்ளிகள் பொதுமக்கள் உழைப்பின் வேர்வைத் துளிகள் என்பதையுணர்ந்து, தலைமையமைச்சர் அவர் களிடம் தமிழை வளர்க்கும் தக்க முறையைத் தெரிவித்து, வீண் முயற் சியை மாண் முயற்சியாக மாற்றுவாராக. |
இக்காலத்தில் தமிழ்த்துறையிற் பலர் பதவியினாலேயே பெரியவரா யிருக்கின்றனர். படிப்பினால் அல்லர். மலையா போன்ற அயல்நாட்டுத் தலைவர்க்கு அது தெரியாது. ஏராளமாய்ப் பணம் செலவிட்டால் எந் நாட்டிலும் உலகத் தமிழ் மாநாடு கூட்டலாம். அதனால், அதைக் கூட்டுபவர் பெயர் பெறலாம். ஆனால், தமிழுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. கூட்டமும் கொண்டாட்டமும் சிறப்பாக நடைபெறுவதனாலேயே தமிழ் சிறப்படைந்துவிட்டதெனக் கருதுதல் தவறாகும். இக் காலத்தில் உண்மைத் தமிழறிஞர்க்குத் தமிழ்நாட்டிலும் இடமில்லை. தமிழைக் காட்டிக் கொடுப்பவரே தலைமைப் பதவி தாங்கித் தழைத்து வாழ்கின்றனர். |