பக்கம் எண் :

86தமிழ் வளம்

தவறான தாய்மொழிப் பற்றுக் கொண்டு தமிழை வளர்ப்பதுபோல் தளர்த்துவரும் தமிழ்ப் பேராசிரியர் கவனிப்பதே யில்லை. மேலும், மாணவரைத் தமிழிற் கற்குமாறு வற்புறுத்தி வரும் தமிழ்ப் பேராசிரியர் சிலர், தம் ஆங்கிலப் பட்டத்தைத் தமிழிற் குறிக்கும்பொழுது தமிழில் மொழிபெயர்க்க விரும்பாமை வேடிக்கையான செயலாகவே விளங்கு கின்றது.
     தமிழ் என்றும் இருக்கவேண்டு மெனில் ஆங்கிலத்துணை அதற்கு இன்றியமையாதது. ஆங்கிலத் துணை நீங்கின், உடனே இந்தி வெள்ளம் வந்து தமிழ்மேற் சாடி அதனை நாளடைவில் அடித்துக்கொண்டு போய்விடும். ஒரு மொழி உலகில் வழங்குவது அதைப் பேசுவாரின் தொகையைப் பொறுத்ததே. பேசுவார் தொகை குறையின் வழக்கழியும்; அதுவே மொழியழிவாம்.
     இதுகாறும் கூறியவற்றால், இத் தமிழ்நாட்டிற்கு ஏற்பது தமிழும் ஆங்கிலமுமாகிய இருமொழித் திட்டமே யென்றும், ஆங்கிலம் நீங்கின் இந்தி வந்து தமிழை ஒழித்துவிடு மென்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க.