பக்கம் எண் :

94தமிழ் வளம்

17
அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு

     கி. மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியத்தில்,

    

"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து"

என்று வேங்கடமலைக்கு அல்லது வேங்கடக் கோட்டத்தின் வடவெல் லைக்குத் தெற்கிலுள்ள நிலமெல்லாம் தமிழ்நாடெனக் குறிக்கப்பட்டது. அதற்குட்பட்டதே வெங்காலூர் (Bangalore).

"கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும்"
"கோற்றொடி மாதரொடு குடகர் தோன்ற"

என்னும் சிலப்பதிகார அடிகளால் கி.பி.2ஆம் நூற்றாண்டில் கருநாடு (கருநாடகம்), குடகு என்பன மொழிப்பெயராகவன்றி நாட்டுப் பெயரா கவே வழங்கியமை அறியப்படும்.

     கி. பி. 7ஆம் நூற்றாண்டினரான குமரிலபட்டர் தமிழையும் திராவிட மொழிகளையும் 'ஆந்திர திரவிட பாஷா' என்று தொகுத்துச் சுட்டியதால், அவர் காலத்திலும் கருநாடகமொழி தனிமொழியாகப் பிரியாது தெலுங்கில் அடக்கப்பட்டிருந்தமை தெளிவாம்.

     எல்லா வகையிலும் தமிழிலக்கியத்திற்கு மிகமிகத் தாழ்ந்த கன்னட இலக்கியமும் கி.பி.8ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதே.

     தொல்காப்பியக் கிளவியாக்க 51ஆம் நூற்பாவுரையில், இளம் பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர் முதலிய உரையா சிரியர் காட்டியிருக்கும்

 

"வடுகர் அருவாளர் வான்கரு நாடர்
சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங்
குறுகா ரறிவுடை யார்."

     என்னும் பழைய மேற்கோட் செய்யுளும், "கொடுங் கருநாடரும்" என் னும் இளங்கோவடிகள் குறிப்பும், "இதெல்லாம் பழைய கருநாடகம்" என்னும் வழக்கும், பண்டைக் கருநாடக மாந்தரின் நிலைமையை உணர்த்தும். மேனாடுகளுள் இங்கிலாந்து ஏனையவற்றினும் நாகரிகப் பண்பாட்டில் ஏற்றமாயிருந்தது