18 தி.மு.க அரசிற்குப் பாராட்டு |
கடந்த மூன்றரையாண்டுக் காலத்திற்குள் தி.மு.க அரசு தமிழ் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் செய்துள்ள ஆக்கப் பணிகள் மூன்று. அவை, இந்திய அமைப்புத் திட்டத்தில் தமிழ்நாட்டின் பெயர் சென்னை நாடு என்று இருந்ததைத் தமிழ்நாடு எனத் திருத்தியது, தமிழ்க் கரணத்தைச் சட்டமுறைப்படிச் செல்லுபடியாக்கியது, கோவில் வழிபாட்டிற்குக் கடந்த மூவாயிரம் ஆண்டாக விலக்கப்பட்டு இருந்த தமிழை மீண்டும் புகுத்தியது, என்பன. அம் மூன்றும் முறையே ஒன்றினொன்று சிறந்தவை. |
தமிழர் முன்னேறும் வழி தமிழேயாதலால் ஆங்கிலத்திற்கும் ஆரியத்திற்கும் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழை அவற்றினின்று விடுவித்து அரசியல் மொழியும் மதவியல் மொழியுமாக்கியது, தமிழ் நாட்டிற்கு உயிர்நாடித் திட்டமாகும். |
சிவநெறியும், திருமால் நெறியும் தமிழர் கண்ட சமயங்களே யாதலால் தமிழ் நாட்டில் தமிழர் கட்டிய கோவில்களில் தமிழர் தொன்று தொட்டு வந்த தமிழ் முறையைத் தள்ளிவிட்டு அறியாத அயன் மொழியில் வழி பட, அறியாமையும் அடிமைத்தனமுமன்றி வேறோரு கரணியமுமில்லை. |
பிராமணர், காலத்திற்கேற்பத் தம் கருத்தை மாற்றிக் கொள்ளவும், ஆண்டி முதல் அரசன் வரைப்பட்ட எப்பதவிக்கும் தம்மை ஏற்றவ ராக்கிக் கொள்ளவும் இயல்பாகவே திறம் படைத்தவர். இன்று பிராமணி யத்தை நடத்தி வருபவர் அடிமைத்தனமும் தன்னலமும் மிக்க போலித் தமிழரே. வடமொழியை அறவே விலக்க தமிழைப் பண்டுபோற் கோவில் வழிபாட்டு மொழியாக்க வேண்டுமென்பது உலகத் தமிழ்க் கழகத்தின் அடிப்படைக் குறிக்கோள். அதை எளிதாக நிறைவேற்ற வழிவகுத்த தி.மு.க அரசே தமிழ் நாட்டை வழி வழி ஆள்க. அதை ஆற்றலுடன் நடத்திவரும் அருட் செல்வனார் நீடு வாழ்க! |
இனி, இம்மட்டில் நின்றுவிடாது, தமிழின் உண்மையான இயல்பை யும் வரலாற்றையும் அறிந்து, தமிழ்நாட்டிற்குத் தமிழிலும் வெளியுலகத் திற்கு ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தல் வேண்டும். தமிழ் கி.மு. 50,000 ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி முழுவளர்ச்சியடைந்து உலகெங்கும் திரிந்தும், சிதைந்தும் பரவியுள்ளது. குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும். தமிழர் தென் னாட்டுப் பழங்குடி மக்களேயன்றி, ஆரியர்போல் வெளிநாட்டிலிருந்து வந்தவரல்லர். |