பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்45

3. சூ விளையாட்டு

(1) பாண்டிய நாட்டு முறை
     ஆட்டின் பெயர்: பாண்டிநாட்டில் இது இன்று அவுட்டு (out) என்னும் ஆங்கிலப்பெயரால் வழங்குகின்றது. ஓடித் தொடும் ஒருவன், உட்கார்ந்திருக்கும் ஒருவனை 'அவுட்டு' என்று சொல்லி எழுப்பும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது. இது முதலாவது உசு விளையாட்டு என்று வழங்கியிருக்கலாம்.
     ஆடுவார் தொகை : இதை ஆட ஐவர் வேண்டும்.
     ஆடிடம் : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இதை ஆடலாம்.
     ஆடு முறை : மூவர் இவ்விரு கச இடையிட்டு, ஒரே திசை நோக்கி வரிசையாக நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். ஒருவன் அவரைச் சுற்றியும் அவருக்கிடையிலும் ஓடுவான். இன்னொரு வன் அவனைத் தொடவேண்டும். தொடுகிறவன் வரிசையைச் சுற்றியன்றி இடையிற் செல்லக்கூடாது. ஆயின், இடையில் வரிசைக் கோட்டைத் தாண்டாது எட்டித் தொடலாம்.
     ஓடுகிறவனுக்கு மிக வசதியிருத்தலில் அவனைத் தொடுவது அரிது. தொட முயல்கிறவன் நீண்ட நேரம் ஆடியோடிப் பார்த்து விட்டு, பின்பு ஓடுகிறவனுக்கு அண்மையாகத் தனக்கு முன்னாலிருப்பவனை 'அவுட்டு' என்று சொல்லி எழுப்பிவிட்டு அவனிடத்தில் தான் உட்கார்ந்துகொள்வான். உட்கார்ந்திருப்பவர் ஒரே திசைநோக்கி உட்கார்ந்திருப்பதாலும், முன்னோக்கியன்றிப் பின்னோக்கி ஓடித் தொடுதல் கூடாமையாலும், எழுப்புகிறவன் என்றும் எழுப்பப்படுகிறவனுக்குப் பின்னாக நின்றே எழுப்புவன். எழுப்பப்பட்டவன் உடனே ஓடிப் போய் ஓடுகிறவனைத் தொட்டுவிடின், தொட்டவன் ஓடுகிறவனாகவும் ஓடினவன் தொடுகிறவனாகவும் மாறல் வேண்டும். ஓடுகிறவன் தான் எப்போது விரும்பினும், உட்கார்ந்திருக்கும் ஒருவனை எழுப்பி விட்டு, தான் அவனிடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்.