பக்கம் எண் :

46தமிழ்நாட்டு விளையாட்டுகள்

     ஓடுகிறவன் தான் கூடியமட்டும் தொடப்படாதவாறு தொடுகிறவனுக்கும் உட்கார்ந்திருக்கிறவனுக்கும் நேர் முன்னும் அண்மையிலும் நில்லாது மிகத் தள்ளியே நிற்பன்.
     இங்ஙனம் வேண்டுமளவு தொடர்ந்தாடப்பெறும்.
     ஆட்டுத் தோற்றம் : இது வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. தொடுகிறவன் வேட்டைக்காரனும், ஓடுகிறவன் வேட்டை விலங்கும், எழுப்பப்படுகிறவன் வேட்டை நாயும் போன்றவராவர்.
     ஆட்டின் பயன் : ஓடும் ஒருவனைப் பிடிப்பதும், ஒருவனுக் குப் பிடிகொடாமல் ஓடித் தப்புவதுமாகிய வினைப்பயிற்சி, இவ் வாட்டாற் பெறப்படும்.
(2) சோழநாட்டு முறை
     ஆட்டின் பெயர் : சூ விளையாட்டு என்னும் தனித்தமிழ்ப் பெயர் வழங்குவது சோழநாட்டில்தான். "சூ" என்று சொல்லி ஒருவன் இன்னொருவனை எழுப்பும் விளையாட்டு அச் சொல்லாற் பெயர்பெற்றது.
     ஆடுவார் தொகை : அறுவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.
     ஆடுமுறை : ஆடுவார் சமத்தொகையவான இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, கட்சிக்கொருவனாக இருவர் நிற்க, ஏனையரெல்லாம் வரிசையாய் இடையிட்டு நிலத்தில் உட்கார்ந்து கொள்வர். உட்கார்ந்திருப்பவருள், ஒவ்வொரு கட்சியாரும் ஒருவன்விட் டொருவனாயிருப்பர். ஒரு கட்சியார் கிழக்குநோக்கின் மற்றொரு கட்சியார் மேற்கு நோக்கியும், ஒரு கட்சியார் தெற்கு நோக்கின் மற்றொரு கட்சியார் வடக்கு நோக்கியும், இருப்பர்.
     நிற்பவருள், ஒருவன் ஓட இன்னொருவன் தொடல் வேண்டும். தொடுகிறவன் தன்னால் தொடமுடியாதென்று கண்டால், தன் கட்சியாருள் ஒருவனைச் "சூ" என்று சொல்லி எழுப்புவான். பிற செய்திகளெல்லாம் பாண்டிநாட்டு முறையே.
     இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு எதிரெதிர்த்திசையை நோக்கியிருப்பதும், "சூ" என்று சொல்லுவதுமே சோழநாட்டு வேறுபாடாம்.