பக்கம் எண் :

291

Untitled Document

7. புதுவையில் பட எரிப்பு!


(குயில், 14.6.60)


     ‘நாம் தமிழர்!’   இயக்கத்தைச்   சார்ந்த   தமிழ் நம்பி (கிருஷ்ணராஜ்)
கூட்டத்தில் எந்தப் பிளவும் இல்லை.

     புதுவைத்   திராவிடர்   கழகத்தினரில்   கனகரங்கம் கூட்டம் என்றும்
நேரயேல்   கூட்டம்   என்றும்,  தமிழ்த்தொண்டன் கூட்டம் என்றும் மூன்று
பிரிவுகள் உண்டு.

     தமிழ் நம்பி   (இவர் தினத்தந்தி ஏஜன்டு)    தம் கூட்டத்தோடு படம்
எரிக்கப்   போவதாக   முன்  கூட்டியே, அரசினர்க்கும்  பொதுமக்களுக்கும்
அறிவித்திருந்தார்.   அவரை   எதிர்த்துப்   புதுவைக்  காங்கிரசைச் சேர்ந்த
காலிகள் மிரட்டல் துண்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

     பட எரிப்பு நாள் காலையில் தமிழ் நம்பியையும், பழநியையும் குபேரன்
ஆட்கள் பட்டப்பகலில் மக்களறியப் போலீசு இன்ஸ்பெக்டர்  சின்னசாமிஐயர்
முன்னிலையில் நினைவு இழக்கும் வரைக்கும் தாக்கினார்கள்.

     தமிழ்த்தொண்டன்  கூட்டத்தைச்  சார்ந்த இருவரும் தாக்கப்பட்டதாகக்
கேள்வி.

     இதிலோர் அருவருக்கத்தக்க செய்தி என்னவெனில்,

     ‘நாம் தமிழர்’   இயக்கத்   தமிழ்நம்பி   முதலியவர்களையும்,  தமிழ்த்
தொண்டனைச்    சேர்ந்த   இருவரையும்   தாக்கப்போவதைத்   திராவிடர்
கழகத்தைச் சேர்ந்த கனகலிங்கமும் நேரயேலும் ஆதரித்தார்கள்,  ஆதரித்தும்
வருகின்றார்கள் என்பதே.

     படம்   எரித்ததற்காக   மொத்தம்  12 பேர்களுக்குத் தலா 25 பிராங்க்
வீதம் தண்டம் செய்து வெளியில் அனுப்பினார்கள் அரசினர்.

     தமிழ் நம்பி பற்றி வழக்கு நடைபெறும்  அவர் சிறையிலிருந்து தற்காலிக
விடுதலை பெற்றிருக்கின்றார்.

     தாக்கிய   காலிகளைச்   சிறைப்படுத்தியது   போல்    காட்டி உடனே
வெளியில் விட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.

     புதுவை  அரசினர்க்கும் அறிவும்  ஆண்மையும் இருந்தால், சட்டத்தைப்
பாதுகாப்பதில்   அவர்கள்   பொறுப்புக்   காட்ட வேண்டுமே தவிர  காலிப்
பசங்களைக் கொண்டு இவ்வகைச் செயல் செய்வதை ஆதரித்தது சரியல்ல.