பக்கம் எண் :

51

Untitled Document

1. குயில்


(குரல் 1, இசை 1, 1.6.58)


     ‘குயில்’   மீண்டும்   வெளிவருகின்றது. தமிழர்கள் ஆதரிக்க  குயில்
பாட்டும் உரைநடையுமாக   வெளிவரும். குயில் தமிழின் அருமை பெருமை
களைக் கூறும்.   தமிழ்மேல்   பகைவர்   வீசிய  வீசுகின்ற குப்பைகட்குப்
புயலாகும்.   அதன்   உண்மை   அழகுக்கு  விளக்காகும். குயில் தமிழறம்
தமிழொழுக்கம்  முதலியவை இன்னவையென்றும் சாதி என்ற அழுக்கற்றவர்
தமிழர் என்றும்   பாடும்.    குயில்   எல்லாம் உடையவர் தமிழர் என்னும்
அவர்பால்   இன்று  இல்லாதது ஒற்றுமை உணர்ச்சி ஒன்றே என்றும் குயில்
தமிழரின்   நல்வாழ்வு   தமிழ்நாடு விடுதலை பெறுவதில்தான் இருக்கின்றது
என்ற   உண்மையைத்தமிழர் உணரச்செய்யும். குயில் அரசியற் சோலையில்
புகும் மக்களியல் மாந்தளிர் உண்ணும். பொருளியற் பண்பாடும்.

குயில் படிப்போர்க்கு ஒன்று


     குயில்    பிறரால்   எழுதப்படும்  பாட்டு உரைநடைகட்கு  அவரின்
புனைபெயர்    அல்லது     இயற்பெயர்    இட்டிருக்கும்.   ஆசிரியரால்
எழுதப்படுவனவற்றிற்குப் புனைபெயரோ இயற்பெயரோ இரா.

குயில் பற்றி ஏட்டாசிரியர்க்கு ஒன்று

     குயிலில் வெளிவரும் ஒரு பாட்டையோ ஒரு கட்டுரையையோ மட்டும்
தம் ஏட்டில் எடுத்தாளலாம்.

குயில் பற்றி நூலாசிரியர்க்கும்
நூல்வெளியிடுவோர்க்கும்ஒன்று

     குயிலினின்று   பாட்டையோ   கட்டுரையையோ     அவற்றின் ஒரு
பகுதியையோ   முழுவதையுமோ  எடுத்தாள ஆசிரியர் ஒப்புதல் வேண்டும்.

குயில் பற்றிப் படக்கலை ஆசிரியர்க்கு ஒன்று

     பாட்டையோ   உரைநடையையோ அவற்றில் ஒரு சொற்றொடரையோ
அப்படியே கையாள்வதும் சொல்லை மாற்றிக் கையாள்வதும் சழக்கும்.

இன்றியமையாச் சிறப்பின் வாயிலும்
குன்ற வருப விடல் (குறள்)