பக்கம் எண் :

52

Untitled Document

2. படிக்க விருப்பந்தான் பள்ளியில்
வகுப்பில்லை


(குயில் 8.6.58)


     தமிழர்கள்   இருட்டுக்    கிடங்கில்   குடிபுக வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது.   அதற்குமுன்   அவர்கள் ஒளி தழுவிய வெளியில் நல்வாழ்வு
நடத்தியவர்கள்.

     ஆயிரத்து ஐந்நூறுயாண்டின் முற்பட்டதான இறந்தகால நிழற்படத்தை
உற்றுநோக்குங்கள். தமிழர்கள் எல்லோரும் படித்தவர்கள்.ஆயிரத்தொருவர்
புலவர்.  பதினாயிரத்தொருவர்   பாவாணர்.     பல்கோடி  தமிழ்மக்களும்
படித்தவர்கள்.   அவர்கள்   ஒளியுலகில்   நல்வாழ்வு  நடத்தி இன்புற்றுக்
கிடந்தார்கள்.

     அதன்   பிற்பட்ட   காலத்தில்  தமிழர்களின் நிலை  மாற்றமடையத்
தொடங்கியது.   ‘‘ஆறிடும்  மேடும் மடுவும்போல் ஆம் செல்வம் மாறிடும்
ஏறிடும்’’ - அன்றோ?     மாறியே   விட்டது.  பிறக்கும்போதே  ஒருவன்
உயர்ந்தவனாம்.   ஒருவன் தாழ்ந்தவனாம். தமிழர்கள் அனைவரும் தாழ்ந்த
வர்களாம்.  அவர்கள் உயர்ந்த சாதியார்க்கு அடிமையாயிருந்து காலந்தள்ள
வேண்டுமாம்.

     தமிழர்கட்குப் படிப்பு ஒன்றா?அறிவுத்துறையில்  அவர்கட்கு  நாட்டம்
ஏன்? என்றதொரு கொள்கை பரவிற்று. தமிழர்கட்கிடையில்!  இந்த நெருப்பு
மழைக்குக் குடை எது?  கல்விக்கும் தமிழர்க்கும்  தொடர்பற்றுப் போயிற்று.
தமிழ்ச்சான்றோர் அனைவரும்  தமிழரை நோக்கிக்   ‘கற்கை நன்றே கற்கை
நன்றே’ என்று கதறினர்.     ‘கற்க கசடற’ என்று கதறினர். இதற்கு மாறாகக்
கல்வியின்    பயனையே    மறந்தனர்.தமிழர்கள்       இருட்டுக்கிடங்கில்
குடிபுகுந்தனர். வெளியில் எட்டிப் பார்க்கவும் எண்ணினாரில்லை.

     தமிழரசர்கள்   கோயில்கள்   கட்டினர்.  எங்கும்   பெரிதுபெரிதாக
அருளைத்   தேடச்   சொன்னார்கள்.   விரைவில்   இறந்து   ஒழியும்படி
இருட்காலமே   தலைதூக்கி   நடந்துகொண்டிருந்தது. இப்போதுதான் இந்த
நூற்றாண்டின்   நடுவில்   தான் ஒரு மின்னல் தோன்றிற்று. காதுகிழிய இடி
ஒன்று இடித்தது.   இருட்டுக்  கிடங்கில் அடைபட்டிருந்த தமிழர் வெளியில்
எட்டிப் பார்த்தார்கள். ஒளி   தழுவிய     வெளி வாழ்க்கைக்கு நல்லதாகக்
காட்சியளித்தது.