கல்விப் பயனை உணர்ந்தார்கள். தம் மக்களின் கண்ணற்ற நிலையை எண்ணிக் கலங்கினார்கள். இந்த நிலை வரவேற்கத் தக்கதன்றோ? தமிழ்மக்களின் தலைவர் என்போர் ஆட்சியில் அமர்ந்துள்ளோம் என்போர் அனைவரும் இந்நிலை கண்டு மகிழ வேண்டுமன்றோ? கல்விக் கழகம் நோக்கித் தாம் பெற்ற மகனை - மகளைக் கையிற் பிடித்துச் செல்கிறார்கள்; கண்கலங்கித் திரும்புகிறார்கள்; வகுப்பில் இடமில்லையாம். அரசியல் தலைவரும் ஆளவந்தாரும் சிரிக்கிறார்கள். இந்நிலையைக் கண்டு, ஏன் எனில், சிபார்சுக்குத் தம்மிடம் வரவேண்டிய நிலை பெற்றோர்களுக்கு ஏற்பட்டுவிட்டதல்லவா? மெய்யாகவே, ஒரு மாணவருக்கு ஒரு துறையில் ஒரு வகுப்பில் இடங்கோரி ஆளவந்தார் வீட்டு - அரசியல் அலுவல் தலைவர் வீட்டுக் குறட்டுப் பந்தலின் காலைப் பிடித்துக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. ஆளவந்தார்கள் ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்கள்.ஆயிரம் கோடி செலவிடப் போகிறோம் என்று காரில் திரிவதன் வாயிலாகவே அத்தொகையைச் செலவிட்டு வருகிறார்கள். வானக் கூரையைச் சிறிது தாழ்த்தப் போகிறார்களாம். வையத்தைச் சிறிது உயர்த்தப் போகிறார்களாம். கடலை பெரிதாக்கப் போகிறார்களாம். மலையைக் குள்ளமாக்கப் போகிறார்களாம். பயனுள்ள வேலையாக இருக்கலாம் படிப்போர்க்கு வகுப்புக்கள் நிறைய ஏற்பாடு செய்ய வேண்டுமா இல்லையா? இன்றியமையாத வேலை எது? இன்று கோடிக்கணக்காக உள்ள தமிழ் மாணவர்களின் நிலை என்ன? கண்ணீருடன் கம்பலையுமாகத் திரிகின்றார்களே வகுப்பு வாங்கித் தரும்படி. அவர்கட்கு வசதி செய்துதரும் வேலைதான் அரசினர்க்கும் ஆளவந்தார்க்கும் முதல் வேலை.
|