(குயில்; குரல் 1, இசை-5; 1.7.58)
எந்த வட்டாரத்தில் தி.க. கொள்கை பரவவில்லை - அந்த வட்டாரத்தில் விரைவில் பணி தொடங்கவேண்டும். எந்த வட்டாரத்தின் தலைவர் மேல் உறுப்பினர்கட்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கின்றது? அந்தத் தலைவர், தம் பதவியை விட்டு விலகிக் கொண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும். அந்தத் தலைவர் விலகாவிட்டால் பெரியார் அவர்களே சொல்லி விலகும்படி செய்ய வேண்டும். எந்த வட்டாரத்தின் தலைவரிடமுள்ள உறுப்பினர் பட்டியல்குறுகலாய் இருக்கின்றது. அந்தத் தலைவர் அப்பட்டியலை விரிவுபடுத்த வேண்டும். அந்தத் தலைவர் மறைவான காரணத்தால் உறுப்பினர் தொகையை விரிவுபடுத்தவில்லையானால் அந்தத் தலைவர் செய்கையை உற்றுக் கண்காணிக்க வேண்டும். எந்தப் பகுதியில் கழகக்கொடி பறக்கவில்லை? அங்கு கழகக்கொடியைப் பறக்கச் செய்யவேண்டும். எந்தப் பகுதியில் விடுதலை பரவவில்லை? அங்கு விடுதலையைப் பரப்பக் கண்ணும் கருத்துமாய்ப் பணிசெய்ய வேண்டும். எந்தப் பகுதியில் கழகக் கொள்கை பற்றிய நூற்கள் பரவவில்லை? அங்கு நல்லெண்ணத் தோடு-பொறுப்போடு பரப்பவேண்டும். எந்தத் தனி உறுப்பினர், எந்த அலுவலக உறுப்பினர், எந்தத் தலைவர், கண்ணீர்த் துளிகளிடமோ காங்கிரஸ்காரர்களிடமோ, கம்யூனிஸ்ட்களிடமோ தொடர்பு வைத்திருக் கிறார்கள்? - அவர்களுக்கு உடனே நல்லறிவு புகட்ட வேண்டும். இப்படியெல்லாம் நாம் கூறுவதால் எந்த வட்டாரத் தலைவரும் உறுப்பினரும் வருத்தப்படமாட்டார்கள் என நம்புகின்றோம். இன்று இந்த உலகத்தில் தி.க. உறுப்பினர் போன்ற தன்னலமற்றத் தவத்திருவாளர்களைக் காணமுடியாது. உடல் பொருள்,ஆவி இம்மூன்றையும் கழக முன்னேற்றத்திற்குத் தமிழரிடம் பொதுநலத்துக்கு அளித்த-அளிக்கின்ற தவத்திருவாளர்களைப் பெரியார் விலாப்புறத்திலின்றி வேறு எங்கு காணமுடியும்.
|