இத்தகைய மேன்மைப் பண்புடையவர்கள் சிறிது சோர்வு கொண்டது கண்டு நினைவுற்றதினால் வருத்தமோ அடைவார்கள்? மகிழ்ச்சியல்லவா கொள்வார்கள். ஒரு வட்டாரத்தில் கூட்டம் நடக்கிறது. இருபத்தையாயிரம் பேர் ஆர்வத்தோடு ஆடாமல் அசையாமல் இருந்து கேட்கின்றார்கள். கூட்டம் முடிகிறது. அந்தக் கூட்டத்தைக் கூட்டிய வட்டாரத் தலைவரை நோக்கி உங்கள் தலைமையின் கீழ் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று கேட்டால் அவர் ‘‘நான் ஒருவன் தான் இருந்து தொண்டு செய்து கொண்டிருக்கின்றேன்’’ என்கிறார். இன்னும் சில தலைவர்கள் ஐந்துபேர் பத்துப்பேர் இருப்பதாகக் கூறுகின்றார்கள். உறுப்பினர் கணக்கு இப்படியானால் கழகக் கொடிக்கணக்கு எப்படி என்றால் நல்ல பார்வையான இடத்தில் பல கட்சிகளின் கொடிகள் காட்சியளிக்கின்றன. தி.க. கொடி எங்கே என்றால் என்ன கொடி எதற்கு என்று திருப்பிக் கேட்கின்றார்கள். கொடிக்கணக்கு இப்படியானால் விடுதலைக் கணக்கு எப்படி என்றால் தலைவரை நோக்கி இவ்வூர்ப் புகைவண்டி நிலையத்தில் தான் விடுதலை கிடைக்கவில்லை. இங்கு இருந்தால் ஒன்று கொடுங்கள் என்றால் ஏஜண்டு இந்த ஊரில் இல்லை என்கிறார். இந்த நிலைக்கு அந்தந்தவட்டாரத் தலைவர்கள் நாணம் இருக்க வேண்டாமா? தலைவர் என்பாரும், கழக உறுப்பினர் என்போரும் இரவு வரக்கண்டவுடன் இன்று நாம் கழகத்திற்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்கவேண்டாமா?
|