என்னும்
குறட்கு இலக்கியமாவதும், காட்சிக் கெளிமையும்
கடுஞ் சொல்லின்மையும், அடிகளின் அடக்கமுடைமையைக்
காட்டும். அடி கள் தம் பல்வகைத் தொண்டிற்கும்
எள்ளளவும் விளம்பரம் நாடாமை யும், அவர்களது
ஆன்றவிந்தடங்கிய கொள்கைக்குச் சான்றாம்;
தமிழ்க் காப்பு
இந்தியெதிர்ப்பு, திருக்கோவில் தமிழ் வழிபாடு,
தமிழ்த்தொண் டரைப் பொருளுதவியால் ஊக்கல்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
உருவாக்கத்திற்கும் வெளியீட்டிற்கும் தமிழக
அரசு போதிய அளவு பொருளுதவுமாறு இடைவிடா முயற்சியை
மேற்கொள்ளல், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
தமிழைக் கற்பிப்பு வாயிலாக்கச் செய்து
வரும் தொண்டு, பொதுமேடைச்
சொற்பொழிவுகளில் தமிழர்க்குத் தமிழுணர்ச்சியூட்டுதல்
முதலியன அடிகளின் அளவற்ற தமிழார்வத்தை யும்
தமிழ்க்காப்புத் தொண்டையுங் காட்டும்.
பறம்புமலைப் பாரி விழாவில், புலவர், பாணர் (இசைவாணர்),
கூத்தர் (நடிகர்), பொருநர் முதலிய முத்தமிழ்க்
கலைவாணர்க்கு வரிசைக் கேற்பப் பரிசளிப்பதும்,
திருப்புத்தூர்த் திருக்கோவில்
விழாவில் தருமிக்குப் பொற்கிழியளித்தல்
என்னும் மரபுபற்றிப் பல்திறப் புலவர்க் கும்
கொடை வழங்குவதும், வள்ளன்மையை மட்டுமன்றி,
கலைவளர்ச்சி வாயிலாகத் தமிழ் வளர்க்குந்
திறனையுந் தெரிவிக்கும்.
இங்ஙனம் முத்தமிழையும் உண்மையாக வளர்த்தும்
முத்தமிழ்க் காவலர் எனும் பட்டம் பெறாமையும்
விரும்பாமையும், மறுமையிற் பெரும்பயன் பெறற்கே
போலும்!
பிறர்க்கென வாழ்கை
ஐங்கோவில் வருமானமே யுள்ள குன்றக்குடித் திருமடத்தலைவர்,
சிறுதொகையே பெற்றுக்கொண்டு, நாடுமுழுதும் அல்லும்
பகலும் அலைந்து, தூக்கங் கெடினும், ஊக்கங் கெடாது,
நள்ளிரவும் நாலாஞ் சாமமும், பல்வேறு கல்வி நிலையங்களிலும்
மன்றங்களிலும் மனைகளி லும், திருக்கோவிலிலும்
தெருக்கோடியிலும், சொற்சுவையும் பொருட்
சுவையும் நிரம்பிய சொற்பொழிவுகளாற்றிக்
கற்றோரும் மற்றோருமாகிய எல்லா மக்களும்
எல்லா வகையிலும் திருந்தவும் தெளியவும், முனைந்து
முயலவும், முன்னேறி வாழவும் மதவியல் அரசியல்
கல்வியியல் பொரு ளியல் பண்பாட்டியல் முதலிய
துறைகளிற் செய்து வரும் பல்திறப் பொதுநலத்
தொண்டு,
உண்டா
லம்மவிவ் வுலகம்(182)
என்னும்
புறநானூற்றுப் பாட்டையே நினைவுறுத்துகின்றது. |