கல்வன்மை
மட்டுமுள்ளார் என்றும் மாணவராயே யிருப்பர்; கல்வன்மையொடு
சொல்வன்மையு முடையாரே ஆசிரியராய் விளங்கிப்
பிறர்க்குப் பயன்படுவர்.
சொல்வன்மை,
உரைநடை வன்மையும் செய்யுள் வன்மையும் என இரு திறத்தது.
அவ் விருதிறனும் உடையாரான அடிகள், நாவலரும்
பாவலருமாகவும், நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர்,
இதழா சிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர்,
பெயர்ப்பாசிரியர் முதலிய பல்வகை யாசிரியராகவு
மிருந்ததொடு, தலைசிறந்த ஆராய்ச்சியாள ராகவும்
விளங்கினமை நாடறிந்தது, உலகறிந்தது.
ஆங்கிலப் புலமை
எழுத்தொலி
யொழுங்கின்மை,
(Shall,
will, should, would
முதலிய) சில துணைவினை யாட்சி, வினையின்பின்
முன்னீடு
(Preposition)
சேர்ந்து வரும் மரபு வழக்குப் (Idioms
and Usages)
பெருக்கம், சில சொற்றொடர்ப் பொருள் மயக்கு,
இலத்தீன், பிரெஞ்சு முதலிய பிற மொழிச்
சொற்றொடர்க் கலப்பு, சொற்பெருவளம் முதலியவற்றால்,
ஆங்கிலம் ஐரோப்பியரும் அவர் வழியின ருமல்லாதார்
கற்கச் சற்றுக் கடினமான மொழியே. அதனால், மதிநுட்பம்,
நினைவாற்றல் முதலிய அகக்கரண வலிமையும், பேச்சுப்
பயிற்சியும் எழுத்துப் பயிற்சியுங் கூடிய பல்லாண்டுழைப்பும்
உள்ளவரே ஆங்கிலப் புலமையும் பேச் சாற்றலும் பெறுதல்
கூடும். அங்ஙனம் பெற்ற பின்பும், அழகிய இலக்கிய
நடையிற் பேசுதலும் எழுதுதலும் அரிது.
அடிகளோ இந்தியருள் ஆராய்ச்சிப்
பட்டம் பெற்ற ஆங்கிலப் பேராசிரியரும் எற்றே
யிவர்க்குநா மென்று கருத்தழியவும், ஆங்கில ருள்ளும்
பெரும்பாலார் அம்மா பெரிதென்று அகமகிழவும், அழகிய இனிய இலக்கண
நடையில் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க்
கேளாரும் வேட்ப,
தமிழர்
மதம், மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, சைவசித்
தாந்த ஞானபோதம், வேளாளர் நாகரிகம், சாதி வேற்றுமையும்
போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள்
சைவம் ஆகா, பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்,
முல்லைப்பாட்டு ஆராய்ச்சி யுரை முதலிய பல நூல்களில்
ஆங்கில முகவுரை வரைந்ததோடு, 133 பக்கங் கொண்ட The
Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge
என்னும் ஆங்கில நூலையும் வெளியிட்டுப் போந்தார்.
Ancient
and Modern Tamil Poets, Can Hindi be the Lingua Franca of
India?
என்பனவும் அவரியற்றிய ஆங்கில நூல்களாகும்.
தம்மிடம்
ஆங்கில நற்சான்று பெற வந்தவர்க்கெல்லாம், அவர்
வேண்டியவுடன், அவர் விரும்பியவாறே ஒரு சிறிதும்
முயற்சியின்றித் தாய்மொழியிற்போல் மிக எளிதாக
விரைந்து எழுதித் தந்த அடிகளின் அளவிறந்த ஆற்றலை,
அவரிடம் பெற்றவர்
அனைவரும் அறிவர். |