விலுணர்தல்,
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய நூல்களை
இயற்றியிருக்கவும் முடியாது; மேனாட்டாரின் மெய்ப்பொருள்
நூல்களைக் கற்றிருக்கவும் முடியாது; தம் ஆங்கில
முகவுரைகளாலும் ஆங்கில நூலாலும் மேலையர்க்குத் தமிழ்
நாகரிகத்தின் மேம்பாட்டைத் தெரிவித்திருக்கவும்
முடியாது.
சமற்கிருதக் கல்வி ஆங்கிலக் கல்விபோல் அறிவடைய
அத்துணை உதவாவிடினும், தமிழ்ப் பகைவரின் போலிக்
கூற்றுகளை மறுக்கவும், ஆரிய நாகரிகத்தின் தாழ்நிலையை
உள்ளவாறு தமிழர்க்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டவும்,
அதனையுங் கற்க வேண்டியதாயிற்று.
அடிகள் எழுதியுள்ள சிறியவும் பெரியவுமான (ஏறத்தாழ) அறு
பான் நூல்களுள் எதையெடுப்பினும், அது தமிழரினப்
பொதுநலத்திற் கன்றித் தந்நலத்திற்காக எழுதப்பட்ட
தன்றென்பது எவரும் மறுக் கொணா அங்கை நெல்லிக்கனி.
ஒரு
மொழியிற் புலமை பெறுவதே அரிதாயிருக்க, முப்பெரு
மொழிகளில் தப்பரும் புலமை பெற்றுத் தமிழிலும்
ஆங்கிலத்திலும்,
"பாயிரந்
தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமும் அகற்றியம்
மாட்சியோ
டெண்ணான் குத்தியின்
ஓத்துப் படலம்
என்னும் உறுப்பினில்"
பல்வகை
நூலியற்றி, ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் அறிவுறுத்திய
திறம், இறைவன் திருவருள் நிரம்பப் பெற்றாரன்றி,
ஏனையர் எவரும் எய்துதற்கு எட்டுணையும் இயலாததேயாம்.
அடிகள் மறைந்து கால் நூற்றாண்டு கடந்தும், அத்தகு பெரியோர்
அண்மையில் தோன்றும் நிலைமை அணுவளவு
மின்மை, எத்துணை ஏக்கமுறக் காட்டுகின்றது அவர்தம்
மும்மொழிப் புலமையை!
-
மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் 1977
|