பேராசிரியரும், அதிகாரிகட்கும் கட்சித்தலைவர்க்குங்
கட்டுப்பட்டே யிருக்கவேண்டியிருப்பதால், ஆராய்ச்சியாளர்க்கு
இன்றியமையாத மேற் குறித்த அறுபண்புகளையும்
அவரிடத்திற் காணமுடியாது. ஆதலால், மறைமலையடிகள்
போன்றாரே என் நூல்களை மதிப்பிடத் தகுதியுள்ளவராவர்
பிறரெல்லாம் அவற்றைப் படித்தற்கும் பாராட்டற்
குமே யுரியர்.
இனி, மொழிநூல் துறையிற் குழந்தைப் பருவத்திலுள்ள
புலவர் சிலர் என் முன்நின்று
சொல்லாராய்ச்சிபற்றிக் கூறுவதும், என் கூற்றை
மறுப்பதும், "தேவதூதருங் கால்வைக்க அஞ்சுமிடத்திற்குள்
முழுமக்கள் புகுகின்றனர்." ("Fools
enter where angels fear to tread."),
"தான் அறியாதான் என்பதை அறியாதான் முட்டாள்"("He
who knows not that he knows not is a fool.")
என்னும் ஆங்கிலப் பழமொழியையும்
பொன்மொழியையுமே நினைவுறுத்துகின்றன. இவ்
விருபதாம் நூற் றாண்டில் பனிமலை போலப் பரந்தும்
நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய
தமிழ்ப்புலவர் மறைமலையடிகள் ஒருவரே. அவர்களே,
ஒரு தமிழ்ப்புலவர் ஒருகால் தம் தவறான
சொல்லாராய்ச்சி யொன்றைக் கூறியபோது, அது
பொருத்த மன்றென மறுத்துரைக்க, அஃது என்னா
ராய்ச்சி யென்று அப் புலவர் பொய்த்தபின்,
"அங்ஙனமாயின் நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன்"
என்று திருவாய் மலர்ந்தார்களாயின், அவர்கள்
என்னை மொழிநூற்றுறையில் எத்துணை மதித்திருந்தார்
களென்பதை அறிந்துகொள்க. ஓர் அடிப்பட்ட
கதையை மாற்றிப் பாவினப் பனுவல் பாடிய துணையானே,
ஒருவர் தம்மைக் கம்பரென்றும் கம்பரினும்
மிஞ்சிய கொம்பரென்றும் மதித்துக்
கொள்ளலாம். ஆயின், தாம் கல்லாத துறையில்
ஆழந்தெரியாதிறங்கி யமிழ்ந்துபோவது புல்லறி
வாண்மையின்பாற் பட்டதாம். மொழிநூல் என்பது
ஒரு தனிப்பட்ட அறிவியல் என்பதையும், அதற்குப்
பன்மொழி யிலக்கண அறிவும் சொற்றொகுதி யறிவும்
வேண்டுமென்பதையும், மொழியாராய்ச்சி
யில்லாதவர் சொல்லாராய்ச்சியில் இறங்குதல்
கூடாதென்பதையும், இன்னும் பல தமிழ்ப் புலவர்
அறிவதில்லை. இசை, நாடகம், மருத்துவம், கணியம்
முதலியன எங்ஙனம் மொழியினின்று வேறுபட்டனவோ,
அங் ஙனமே மொழிநூல் என்பதும் வேறுபட்டதாகும்.
ஒவ்வொரு துறையிலும் அததிற் பயின்றவரே அறிவுடையவராவர்.
"அறிவார் அறிவர்? அறிவார் அறிவர்"
என்பது பழமொழி.
"வான்குருவி
யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் -
யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது"
என்னும்
தனிப்பாடலை நோக்குக. |