நாலாண்டாகியும் பேராசிரியரும் பெருமக்களும்
எத்துணையோ எடுத்துச் சொல்லியும், இதுகாறும்
தமிழுக்கு எத்தகைய ஆக்க வேலையுஞ் செய்யவில்லை.
தி. மு. க. அரசிற்குத் தமிழ்ப்பற்று இல்லாமலில்லை
யென்றும், ஏதேனும் திட்டம் வகுத்துக்காட்டினால்
உடனே அதை நிறைவேற்றுமென்றும், சிலர் கூறியதால்
அதையுஞ் சிறப்பாகச் செய்து பார்த்தோம்.
"தானாகக் கனியாதது தடியாலடித்தாலுங் கனியாது"
என்னும் உண்மையே விளங்கிற்று.
"வாதக்கோன்
நாளையென்றான் வத்தக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதேனும் இல்லையென்றான் - ஓதக்கேள்
வாதக்கோன் நாளையினும் வத்தக்கோன்
பின்னையினும்
ஏதக்கோன் "இல்லை" இனிது."
என்று
ஒளவையார் பாடியவாறு, தி. மு. க. வின் பின்னையினும்
பேரா யத்தின் "இல்லை"யே இனிது என்னுமாறாயிற்று.
தி. மு. க. சார்பான தமிழன்பர் சிலர், இன்னும்
சற்றுப் பொறுத் திருந்தால் அரசு உதவும் என்பர்.
இலவுகாத்த கட்டுக்கதைக் கிளியும் பஞ்சு வெடித்தபின்
ஏமாற்றமடைந்ததேயன்றி, இன்னும் சற்றுப் பொறுத்திருந்தாற்
பழுக்குமென்று கருதவில்லை. ஆதலால், இன்னும் தி.
மு. க. உதவுமென்று காத்திருப்பது, அஃறிணையினும்
இழிந்த பகுத்தறிவின்மையையே காட்டும்.
மேலும், ஆராய்ச்சிக்கு இன்றியமையாத தகுதியாகிய
மூப்பையே தகுதியின்மையாகக் காட்டுவதும், ஒரு
வினைக்குச் சிறந்த தகுதியுள்ள ஒருவரை அமர்த்தாது
தகுதி சிறிதுமில்லாத பலர் சேர்ந்த குழுவை அமர்த்துவதும்,
அறிவுடைமையின்பாற் படாத பயனில் செயலேயாகும்.
இனி, பொதுத் தேர்தலைச் சுட்டிக் கடமையைக்
கடத்துவதும், விரை செயல் தூண்டுகோலையே முட்டுக்கட்டையாகக்
காட்டுவதாகும்.
தமிழ் எதிர்காலத்தில் வாழவும் வளரவும் இன்றியமையாத
பணி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலித் தொகுப்பேயாதலாலும், இதை என்னையன்றி
வேறெவரும் செய்யவியலாதாகையாலும், எனக்கு
வரவர மூப்பு மிகுவதாலும், தமிழன்பரான பொதுமக்களின்
உதவி கொண்டு இப் பணியை இன்னே செய்ய உ. த. க.
பொதுச் செயலாளர்ர் பாவலர் பெருஞ்சித்திரனார்
தாம் வகுத்திருக்கும் திட்டத்தை, உடனே செயற்படுத்த
என் முழு இசைவையும் இதனால் தருகின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் வகுத்த வழி இதுவேயாகும்.
-
"தென்மொழி" சிலை 1970" |