பக்கம் எண் :

54பாவாணர் நோக்கில் பெருமக்கள

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்" (64)

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு" (65)

"குழலினிது யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்" (66)

என்னுங் குறள்கள். திருவள்ளுவர்க்கு மக்கள் பலர் இருந்தமையைத் தெரிவிக்கும். இங்ஙனமே பிறவும்.

3. அறத்தை அறத்தின்பொருட்டே வலியுறுத்தியவர்

ஏனை அறநூலாரெல்லாம், நல்விளைவைச் சுட்டி ஆசைகாட்டி ஏவல் (விதி) அறவினையையும், தீவிளைவைச் சுட்டி அச்சமூட்டி விலக்கற வினையையும், செய்யுமாறு தூண்டியிருக்க; திருவள்ளுவரோ, சிறிதும் விளைவை நோக்காதும் தீமையே விளையினுஞ் சிறிதும் அஞ் சாதும், உடன்பாடும் எதிர்மறையுமாகிய இருவகை அறவினைகளையும் அறம் நோக்கியே செய்தல் வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

"நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று" (222)

"ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து" (220)

என்னுங் குறள்களை நோக்குக.

4. எல்லா நிலைமையிலும் மாந்தன் இயல்பை ஆய்ந்தறிந்தவர்

உறவும் எதிரும்பற்றிப் பல்வேறு வகைப்பட்ட இரட்டைப் பகுப்பு (dichotomy) நிலையில், ஒவ்வொருவரும் கொண்ட குணத்தைப் பாராட்டி யும், செய்யுங் குற்றத்தைக் கண்டித்தும், செய்ய வேண்டிய கடமையை எடுத்துரைத்தும், நல்வழிப்படுத்தியவர் திருவள்ளுவர்.

இறைவன் -அடியான், அரசன் - குடிவாணன், கணவன்- மனைவி, தந்தை - மகன், இல்வாழ்வான் - துறவி, செல்வன் - வறி யன், கற்றோன் - கல்லான், தாளாளன் - சோம்பேறி, இரவலன் - புர வலன், சிறியர் - பெரியர், வலியன் - மெலியன், சான்றோன் - கய வன், நண்பன் - பகைவன், உட்பகை - வெளிப்பகை, நோயாளி - நோயிலி, இளையன் - முதியன், குறுவாழி - நெடுவாழி முதலியன இரட்டைப் பகுப்புகள்.

எ-டு: தந்தை - மகன்

"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்"(67)