திண்டு - திண்டன் = தடியன். திண்டு - திண்டி = பருமன், தடிச்சி, யானை. "திண்டி வயிற்றுச் சிறுகட்பூதம்" (தேவா. 1225 : 7) திண் - திட்பு - திட்பம் = செறிவு, உறுதி, வலிமை, தேற்றம். திட்பு - திட்பை - திப்பை = பருத்தது, மேடு. திண்டு - திட்டு - திட்டை = திண்ணை, மேடு. திட்டு = மேடு, மேடான ஆற்றிடைக்குறை அல்லது நீரிடைக்குறை. திட்டு - திட்டம் = தேற்றம், நிலைவரம், உறுதியான ஏற்பாடு, உறுதியான வரையறவு. 'திட்டவட்டம்' என்னும் வழக்கை நோக்குக. திட்டு - திட்டி = சிறுமேடு. திட்டு - திட்டாணி = மரத்தைச் சுற்றிய மேடை. "சத்திரச் சாலையும் ஒத்ததிட் டாணியும்" (இராமநா. சந். 4) திட்டம் - திடம் = உறுதி, மனவுறுதி, தேற்றம், நிலைவரம். திடம் - திடல்-திடர்-திடறு = மேடு. திடல் = மேடு, குப்பைமேடு, மேடான சிறு தீவு. 'மஞ்சள் திடல்' என்பது மேடான ஓர் ஊர்ப் பெயர். திடம் - drdha (வ.). திடம் - திடாரி - திடாரிக்கம். திடாரி = தைரியசாலி. திடாரிக்கம் = மனத்திடம், தைரியம். திண் - திடு - திடுமல் - திடுமலி. திடுமல் = அடங்காத்தன்மை(J.). திடுமலி = அடங்காதவள்(J.). திள் - திம் - திம்மை = பருமன். திம் - திம்மன் = தடியன், பருத்த ஆண்குரங்கு. திம் - திம்மல் - திம்மலி = உடல் பருத்தவள்(J.) திம் - திம்மாக்கு - dimag (உ.) = பெருமை, வீண் பெருமை. திம் - திமி = பெருமீன்(திவா.). திமி-timi(வ.). திமி - திமிதம் = உறுதி. திம்-திமி - திமிசு = இளகிய தரையை இறுகச் செய்யும் கருவி. திமி - திமில் - திமிள் = எருதின் பருத்த முரிப்பு. திமில் - திமிலி = உடல் பருத்தவள். திமில் - திமிலம்-திமில(வ.) = பெருமீன் வகை. திமில்-திமிர். திமிர்த்தல் = மரம்போல் கெட்டியாதல், கை கால் மரத்தல், கொழுத்துத் தடித்தல். |