திமிர் = கை கால் மரப்பு, மரப்புப்போன்ற நோய் (திமிர்வாதம்), மனத்தடிப்பு. ஒ.நோ: L. temere-temeritas, E. temerity. 2. வகு. வகுதல்=பிளத்தல், பிரிதல். வகுத்தல்=பிரித்தல், பிரித்தமைத்தல், அமைத்தல், படைத்தல். "வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது"(குறள். 377) "என்னை வகுத்திலையேல் இடும்பைக்கிடம் யாது சொல்லே"(தேவா. 643 : 2) ஒ.நோ: L. Facio, to make, do, E. manufacture. வகு - வக்கு = வகுத்த வழி, வழி, இடம். 'வக்கில்லை', "வழிவகுத்தல்' என்னும் வழக்குகளை நோக்குக. வகு - வகம் = வழி. வகு-வகுந்து = வழி. "வகுந்துசெல் வருத்தத்து" (சிலப். 11 : 167) வக்கு - வாக்கு = வழி, திசை, பக்கம். 'காற்று வாக்கு' என்னும் வழக்கை நோக்குக. வகு - வகுப்பு. வகு - வகுதி = வகுப்பு. "வகுதியின் வசத்தன" (கம்பரா. இரணியன். 69) வகு-வகிர் = பிளவு, பிளந்த துண்டு, வகுத்த தலைமயி ரிடைவெளி. வகிர் - வகிடு = வகுத்த தலைமயி ரிடைவெளி. வகு - வகை. வகைதல் = பிளவுபடுதல், பிரிதல். வகு - வங்கு - வங்கை = பகை. வகு - வாகு = வகுப்பு, வகுத்த ஒழுங்கு, ஒழுங்கின் அழகு. வாகு - bagu (தெ.). வகு - பகு. வகரம் சிறுபான்மை தமிழில் பகரமாகத் திரியும். எ-கா :வள் - வண்டி - பண்டி - பாண்டி - பாண்டில். உருவு - உருபு. அளவு - அளபு. பகுதல் = பிளத்தல், பிரிதல். பகுத்தல் = பிரித்தல். பகுவாய் = அகன்ற வாய், அகன்ற வாயையுடைய தாழி அல்லது பிழா. பகு - பகுப்பு. பகு - பகுதி - பாதி. பகுதி = பாகம், இரண்டிலொரு பாகம், ஆறிலொரு பாகமாகிய நிலவரி. |