ஒ.நோ: இல் = மனை, மனைவி, குடும்பம், குடி, குலம். குடி-குடிகை = சிறு வீடு, சிறு கோயில். 'கை' ஒரு குறுமைப் பெயரீறு. குடிகை - குடிசை = சிறு வீடு, cottage. குடு - குடில் = சிறு வீடு. 'இல்' ஒரு குறுமைப் பெயரீறு. எ-டு : தொட்டி-தொட்டில். குடில்-குடிலம் = வளைவு, சிறு வீடு. குடிலம்-குடீரம்(வ.). குடி - A.S. cote; E. cot; Ger. kot, koth, kote; Ice. and D. kot = hut or small house. குடி - (குடிம்பு) - குடும்பு - குடும்பம் - kutumba(வ.). குடும்பு - கடும்பு = குடும்பம்,சுற்றம். "கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது" (புறம். 68 : 2) உ-அ, போலி. எ-டு.: முடங்கு-மடங்கு, முறி-மறி, குடம்-கடம்(வ.). குடம் - குடுவை-குடுக்கை = உருண்டைக் கலம், சுரைக்கலம். குள் என்பதன் நேர் மூலம் குல். குல்-குலம் = வட்டமான குடியிருப்பு, வீடு, வீட்டிலுள்ள குடும்பம், குடும்பத்தின் பெருக்கமான மக்கள் வகுப்பு, கூட்டம், தொகுதி. தேவகுலம் = கோயில். குலம் - குலன். E. clan; Gael. clann; It. clann, cland. முதற்காலத்தில் குடிசைகளும் வீடுகளும் வட்ட வடிவாய்க் கட்டப்பட்டன; அல்லது வளைந்த கூரையுடையனவா யிருந்தன. வட்ட வடிவான சிறு வீடுகளை இன்றும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணலாம். குல் - குலவு, குலாவுதல் = வளைதல். குலவு - L. curvus, E. curve. குலவு - குலாவு. குலாவுதல் = வளைதல். குல் - குர் - குரம் = வட்டமான குதிரைக் குளம்பு. குரம் - குரங்கு = வளைவு, கொக்கி. குரங்குதல் = வளைதல். குரம் - குரம்பை = வளைந்த குடில், குடில். குரம் - குரவை = மகளிர் வட்டமாக நின்று ஆடுங் கூத்து. குரவை - Gk. choros = originally a dance in a ring. L. chorus, coracle. குல் - குன். குன்னுதல் = வளைதல், வளைந்து குறுகுதல். குன் - குனி. குனிதல் = வளைதல். |