பக்கம் எண் :

98மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்


14. தெளிதேனும் களி மதுவும்

     உண்டற்குரிய நீரும் நீர்ப்பொருளும்; கல் மண் தூசி துப்பட்டை ஈ
யெறும்பு முதலிய பிற பொருள்களோடு கலந்திருப்பின், அவற்றை நீக்கித்
தெளிந்த நிலையில் உண்ணுவது வழக்கம். பாண்டிநாட்டில் பதநீர் என்றும்
சோழ கொங்கு நாடுகளில் தெளிவு என்றும் சென்னையில் பனஞ்சாறு
என்றும் சொல்லப்படும். இனிய பனைநீரை இங்ஙனம் வடித்தெடுப்பது
இன்றும் கண்கூடு. தேனையும் இங்ஙனம் தெளிவிப்பதால் 'தெளிதேன்'
என்னும் வழக்கெழுந்தது.

     "பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
      நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்"

என்றார் ஒளவையாரும்.

     தேனும் தேன்வகையுமான இன்னீர்களுள் மயங்கத் தருவதும்
தராததுமாக இருவகையுள. கள்ளும் மதுவும் மயக்கந் தருவன; தேனும்
தெளிவும் மயக்கந் தராதன. ஒரே பொருளான பனஞ்சாற்றின் இரு
நிலைகளுள்; கள் மயக்கந் தருவதையும் தெளிவு அதைத் தராமையையும்
நோக்குக. ஆகவே, தேனும் தெளிவும் பொருட்டெளிவால் மட்டுமன்றி
அவை விளைக்கும் புலத் தெளிவாலும் அப் பெயர் பெற்றன.

     கள்=புலனைக் களவு செய்வது, கள் - களி. களித்தல் = வெறித்தல்

     மது = மதப்பை உண்டுபண்ணுவது மதப்பு - மயக்கம்,

     மத - மதம் = மதுக்களிப்பு, வெறி, தேன்,

     மதம் - மதர். மதர்வு = மயக்கம், களிப்பு

     மதர்வை = மயக்கம், களிப்பு, செருக்கு.

     மதம்-மதன் = செருக்கு, காமம். மதனம் - மதனன் = காமுகன்,

     மதம் - மதார் = செருக்கு

     மதம் - மதத்து = வெறி தரும் கூட்டு மருந்து.

     மது - மத்து = மயக்கம் தருவது, ஊமத்தை.

     மத்து - மத்தை, ஊமத்தை,

     மத்து - மட்டு = கள், தேன்,

     மது-மதுர்-மதுரம் = இனிமை. மதுர்-மதுரி. மதுரித்தல் = இனித்தல்.
     மது என்பது வெறிதரும் தேனேயாதலாலும், வெறி தரும் குடிப்புகள்
சில இனிமையூட்டப்படுவதினாலும், கள், மது, தேன், தேறல் (தெளிவு)
முதலிய சொற்கள் தம் பொதுவான இயல்பிற்கு மாறாகவும் பொரு
ளுணர்த்தும்.