பக்கம் எண் :

4பழந்தமிழாட்சி

கடன்மலைநாட்டின் வடபாகம், குட்டம் குடம் துளுவம் கொங் கணம் என்னும் பல பகுதிகளைக் கொண்டிருந்தது. கொங்குநாடு, குடகொங்கு (மேல் மண்டலம்), குணகொங்கு (கீழ்மண்டலம்) என இருபாகமாகப் பிரிந்து, அவற்றுள் குடகொங்கு, மீண்டும் குடகு கருநாடு கங்கநாடு கட்டியநாடு முதலிய பல நாடுகளாகப் பிரிந்து போயிற்று. அவற்றுள் குடகை யாண்ட கோசர் கொங்கிளங் கோசர் எனப்பட்டனர். கங்கநாட்டையாண்ட கங்கர் தம்மைக் கொங்கு நாட்டரசர் (கொங்கு தேச ராஜாக்கள்)என்று கூறிக் கொண்டனர். அக்காலத்துக் கட்டியநாடு தமிழக வடவெல்லையாயிருந்த தென்பது,

"குல்லைக் கண்ணி வடுகர் முனையது
 பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
 மொழிபெயர் தேஎத்த ராயினும்" (11)

என்னுங் குறுந்தொகைச் செய்யுளால் அறியலாகும். குண கொங்கின் தென்பாகம் பூழிநாடு எனப் பிரிந்திருந்தது. அது பொதினி என்னும் பழனிமலையையும் உட்கொண்டிருந்தது. பழனிமலை சேரநாட் டைச் சேர்ந்தது என்பது,

"சேரர் கொங்குவை காவூர் நன்னாடு" 

என்னும் அருணகிரிநாதர் கூற்றாலும்,"வடக்குத்திசை பழனி" என்னும் கம்பர் கூற்றாலும் அறியலாகும். குடகொங்கு பல நாடு களாய்ப் பிரிந்து போனபின், கொங்குநாடு எனச் சிறப்பாக அழைக்கப்பெற்றது, கருவூரைத் தலைநகராகக் கொண்டிருந்த குணகொங்கே. அதனினின்றும் பூழிநாடு பிரிந்தபின், கொங்கு நாடென எஞ்சியிருந்தது கோவை சேல மாவட்டங்கள் கூடிய பகுதியேயாகும். இங்ஙனம் கடன்மலை நாடும் கொங்குநாடும் பலபல பகுதிகளாகப் பிரிந்து போயினும், அவை யாவும் செங்குட் டுவன் போன்ற சேரன் ஆட்சியில் அவனுக்கடங்கியே இருந்தன. அவற்றுள் குடநாடும் குட்டநாடும் கொங்குநாடும் பூழிநாடும் நீண்ட காலமாகச் சேரநாட்டுப் பகுதிகளாகவேயிருந்து, சேரர் குடும்பத்தினரால் ஆளப்பட்டு வந்தன.

     சோழநாட்டின் வடபாகம் தொண்டைநாடு (வடசோழம்) என்றும், தென்பாகம் புனல்நாடு (தென் சோழம்) என்றும் பெயர் பெற்றிருந்தன.

     கடைச்சங்க காலத் திறுதியிலேயே, சேரநாட்டின் வடபாகத்தி லுள்ள துளுவம் கொங்கணம் குடகு கருநாடகம் முதலிய நாடுகள், மொழிபெயர் தேயமாகத் திரியத்தொடங்கிவிட்டன.