பக்கம் எண் :

பழந்தமிழாட்சி41

என மூவகைப்படும். எப்படையராயினும் போர் மறவர்க்குப் பொருநர் என்றும் படையாள்கள் என்றும் படைஞர் என்றும் பெயர்.

     மூவேந்தரிடத்தும் தொன்றுதொட்டுக் கலப்படை(கடற் படை)யிருந்து வந்தது.

"வானியைந்த இருமுந்நீர்ப்
 பேஎநிலைஇய இரும்பவ்வத்துக் 
 கொடும்புணரி விலங்குபோழக்
 கடுங்காலொடு கரைசேர
 நெடுங்கொடிமிசை யிதையெடுத்
 தின்னிசைய முரசுமுழங்கப்
 பொன்மலிந்த விழுப்பண்டம்
 நாடார நன்கிழிதரும்
 ஆடியற் பெருநாவாய்
 மழைமுற்றிய மலைபுரையத்
 துறைமுற்றிய துளங்கிருக்கைத்
 தென்கடற் குண்டகழிச்
 சீர்சான்ற வுயர்நெல்லின்
 ஊர்கொண்ட வுயர்கொற்றவ"              
(மதுரைக். 75-88)

என்று, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட வடிம்பலம்ப நின்ற பாண்டியன், கலப்படை கொண்டு சாலி என்னும் சாவகத் தீவை (Java) வென்ற செய்தியை, அவன் வழியினனான தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மேலேற்றி மதுரைக் காஞ்சி கூறுவதையும்,

"சினமிகு தானை வானவன் குடகடற்
 பொலந்தரு நாவா யோட்டிய ஞான்றைப்
 பிறர்கலஞ் செல்கலா தனையேம்"
                (புறம். 126) 

என்று, கி.பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்த சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் செய்த கடற்போரைப்பற்றிப் புறச்செய்யுள் கூறுவதையும், கி. பி. 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே முதலாம் இராசராசச் சோழன் ஈழத்தையும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத் தையும்( Maldive islands ) கலப்படை கொண்டு வென்று சேரநாட்டுக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளியதையும், அவன் மகன் இராசேந்திரன் நக்கவாரம்( Nicobar ), மலையா( Malaya ), சுமதுரா ( Sumatra ) முதலியவற்றை வென்றதையும் நோக்குக.

     முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு