சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம். யானை மறவர்க்கு, ஆனையாள்கள் ஆனைப்பாகர் குஞ்சரமல் லர் அத்திமல்லர் என்னும் பெயர்கள் வழங்கின. அரசன் அடிக்கடி யானைப்படையை அணிவகுப்பித்துக் கண்டு களிப்பன். யானைப் படை அக்காலத்துச் சிறந்த படையாகக் கருதப்பட்டது. "யானையுடைய படைகாண்டல் மிகவினிதே" என்றார் பூதஞ்சேந்தனாரும். குதிரை தமிழகத்திற்கு அல்லது இந்து தேயத்திற்கு உரிய விலங்கன்றாதலின், அஃது அதன் இயற்கை வாழகமான அரபி நாட்டினின்று ஏராளமாக மாபெருஞ் செலவில் வருவிக்கப்பட்டது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் குதிரை களைப் புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம் என எட்டுவகையாக வகுத்துக் கூறும். அவற்றின் இயல்பை ஆண்டுக் காண்க. (நரிபரியாக்கிய படலம் 87-94) குதிரைமறவர், இவுளிமறவர் என்றும் குதிரைச் சேவகர் என்றுங் கூறப்படுவர். படைக்கு என்றும் சேங்குதிரைகளும் களிற்றியானைகளுமே பயன்படுத்தப் பெறும். வினையிற் சிறந்த குதிரைகட்கும் யானை கட்கும் சிறப்புப் பெயரிடப்படுவதுண்டு. தேர்ப்படை சங்ககாலத்திற்குப் பின் பயன்படுத்தப் பெற வில்லை. இனி, படையை, மேற்கூறிய முறையிலன்றி, ஊழியக் கால அளவு பற்றி, மூலப்படை கூலிப்படை யென்றும்; தொகுக்கும் இடம்பற்றி, நாட்டுப்படை காட்டுப்படை என்றும்; சேர்ந்துள்ள பக்கம்பற்றி, துணைப்படை பகைப்படை என்றும்; எதிர்நிலை வகையில் இவ்விரண்டாக வகுப்பதுமுண்டு. மூலப்படையை வள்ளுவர் தொல்படை என்பர். வாழையடி வாழையாக இருந்து வருவதும், எவ்வகை ஊற்றையும் பொருட் படுத்தாததும், இறப்பிற்கு அஞ்சாததும், போரையே விரும்புவதும், அரசனைக் காக்க என்றும் உயிருவந்தீவதும்,எக்காரணத்தையிட்டும் அறைபோகாததும், வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்களாம். |