பக்கம் எண் :

62பழந்தமிழாட்சி

"இருவர்சொல் வழக்கு நோக்கி யனுவதித் திரண்டு நோக்கி"


என்று பரஞ்சோதி முனிவரும், கூறியிருப்பதால், வழக்கை நன்றாய், அறிந்துகொள்ளற்கும், வழக்காளரின், மெய்ம்மை காண்டற்கும், மன்றத்தார் வழக்கைப் பலமுறை சொல்வித்தமை அறியப்படும்.

     கரியுஞ் சான்றுமில்லாத வழக்குகளில், பழுக்கக்காய்ச்சிய இரும்பைப் பிடித்தல், பாம்புக் குடத்திற் கையிடுதல் முதலிய தெய்வச்சான்று வாயிலாகத் தம் மெய்ம்மையை நாட்டும்படி வழக்காளரை மன்றத்தார் கேட்பது முண்டு. அத்தகைய சான்று பல வழக்குகளில் உண்மைக்கு மாறாயிருந்த தென்பது, "பாழ்ந்தனிசு வேண்டிப் பாம்புக்குடம் பெற்றான்" என்னும் பழமொழியாலும்,


         "கைவிட்ட ஒண்பொருள் கைவர வில்லென்பார்
         மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
         மடம்பட்ட மானோக்கின் மாமயி லன்னாய்
         கடம்பெற்றான் பெற்றான் குடம்"
              (பழ. 211)

என்னும் பழமொழிச் செய்யுளாலும் அறியப்படும். இம்முறை பிற்காலத்துக் கைவிடப்பட்டது.

     வழக்குகள், உரிமை வழக்கு ( civil case ) குற்ற வழக்கு ( criminal case ) என இக்காலத்திற் பிரிக்கப்பட்டிருப்பது போல் அக்காலத்திற் பிரிக்கப்படவில்லை. இருவகை வழக்குகளும் எல்லா அறமன்றங்க ளிலும் தீர்க்கப்பட்டன.

     படைத்தலைவன் செயல்: ஆங்காங்கு அவ்வப்போது நடக்குங் கலகங்களையும் கொள்ளைகளையும், தானாகவும் தன் துணைவரைக் கொண்டும் அடக்கிவைப்பதும், படைத் தலைவன் செயலாகும்.