பக்கம் எண் :

பழந்தமிழாட்சி63

10
பொருளாதாரம்
 

     நாட்டை யாள்வதற்கும் போர் செய்தற்கும் குடிகட்கு நன்மை செய்தற்கும் அரசனுக்குப் பொருள் வேண்டும். அப்பொருள் இடை விடாது வேண்டியிருத்தலின், அது வரும் வழிகளும் நிலையானவையாயிருத்தல் வேண்டும்.


     அரசியல் வருவாய்கள்: மூவேந்தர்க்கு மிகுந்த பொருள் வருவாய்கள், வரி, இயற்கைச் செல்வம், திறை, புதையல், பிறங்கடை (வாரிசு) இல்லாச் சொத்து, கையுறை, நன்கொடை என எழுதி றத்தன.


     இயற்கைச் செல்வம் யானையும் முத்தும் பொன்னும் மணியும் போல்வன. கையுறை குன்றக்குறவர் சேரன் செங்குட்டுவனுக்குக் கண்ணகியைப்பற்றிக் கூறினபோது கொடுத்த மலைப்பொருள்கள் போல்வன (சிலப். 25:37-54). தெய்வத்திருமுன் கையுறையோடு செல்வது போன்று அரசத் திருமுன்னும் செல்வது மரபு. நன்கொடை கரிகால்வளவனுக்கு,


"அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
 நிவந்தோங்கு மரபின் தோரண வாயில்"    
(சிலப். 5 : 103-4)


போல்வது. பிற வெளிப்படை.


     சேரனுக்கு யானையும் பொன்னும் மணியும், சோழனுக்குப் பொன்னும் வயிரமும், பாண்டியனுக்கு யானையும் முத்தும் சிறந்த இயற்கைச் செல்வங்களாயிருந்தன.


"வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்
 கட்சி காணாக் கடமா நல்லேறு
 கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
 கடிய கதழு நெடுவரைப் படப்பை
 ...................................................
 கோடிபல வடுக்கிய பொருணுமக் குதவிய
 நீடுநிலை யரையத்து............... "
                   (புறம். 202)