பக்கம் எண் :

பழந்தமிழாட்சி99

தாங்கிவந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப்பட் டனர். மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்துவந்தவரும் வேளாளரே.


     வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற்றச்சன், செக்கான், கைக்கோளன், பூக்காரன், கிணையன் (கிணைப்பறையன்), பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினெண் தொழிலாரும்; உழவனுக்குப் பக்கத்துணையா யிருந்தது தத்தம் தொழிலைச்செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண் குடிமக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப்பட்டனர்.


    இங்ஙனம் பல்வகுப்பாரையும் உணவளித்துக் காத்ததினா லேயே, வேளாண்வினையைத் திருக்கைவழக்கம் எனச் சிறப்பித்துக் கூறினார் கம்பர். தெய்வத்திற்குப் படைத்த திருச்சோற்றைப் பலர்க்கும் வழங்குவது திருக்கை வழக்கம் எனப்படும்.


"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
 கைம்புலத்தா றோம்பல் தலை"
                 (குறள். 43)

என்று இல்வாழ்க்கை யதிகாரத்தும்,


"இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
 வேளாண்மை செய்தற் பொருட்டு"
                (குறள். 81)


"வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
 மிச்சில் மிசைவான் புலம்"
                    (குறள். 85)


என்று விரும்தோம்பலதிகாரத்தும்


"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
 தொழுதுண்டு பின்செல் பவர்"
                 (குறள். 1033)


என்று உழவதிகாரத்தும், வள்ளுவர் கூறியிருப்பதால், உழவனே தலைமைக் குடிவாணன் (
chief citizen ) என்று அவர் கொண்டமை புலனாகும்.


     மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊணுடைக் கருவிப் பொருள்களும், அரசியற் கின்றியமையாத இறையும், போருக்கு நேர் 



1     "இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும்
      நல்லாற்றி னின்ற துணை"


என்னுங் குறளில்(41), இயல்புடைய மூவர் என்பது அதிகார வியைபால் அந்தணர் அரசர் வணிகர் என்னும் முக்குலத் தில்லறத்தாரையே குறிக்கும். பிரமசாரியன் வானப்பிரத்தன் சந்நியாசி என்று பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது. "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்" என்னுங் குறளிலுள்ள துறந்தார் என்னுஞ் சொல்லே துறவியரைக் குறிக்கும்.