இந்திய நாகரிகம் மட்டுமன்றி உலக நாகரிகமே இந்திய ஆரியரதென்று காட்டுதற்கு, வேதகாலத்தை அளவிறந்து முன் தள்ளி வைக்கும் முயற்சியொன்று இன்று வடஇந்தியாவில் நடை பெற்று வருகின்றது. அறியப்பட்ட தம்பியின் அகவை (வயது) உயர்த்திக் கூறப்படின், அண்ணனின் அகவை தானே உயர்தல் காண்க. 5. இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள் 1. பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத் தலும் மறுத்தலும். 2. பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல். 3. தமிழ்நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதக்காலத்தி னின்றும் தொடங்கல் 4. தென்னாட்டுப் பழங்குடி மக்களாகிய தமிழரை வந்தேறி களாகவும் கலவையினமாகவுங் காட்டல். 5. தமிழ் முன்னூல்களையும் முதனூல்களையும் பின்னூல் களாகவும் வழிநூல்களாகவும் காட்டல். 6. குமரிக்கண்ட இடப்பெயர்களையும் தெய்வப் பெயர் களையும் மூவேந்தர் குடிப்பெயர்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டல். 7. கட்டுக்கதைகளையும் ஆரியச் சொற்களையும் புகுத்தி, இருபெருந் தமிழ்ச் சமயங்களாகிய சிவநெறியையும் திருமால் நெறியையும் ஆரிய வண்ணமாக்கலும், தமிழைக் கோயில் வழிபாட்டிற்குத் தகாததென்று தள்ளலும். 8. மூவேந்தர் பேதைமையால் ஆரியம் வேரூன்றிய கடைக் கழகக் கால நூல்களினின்று ஆரியச் சார்பான சான்று காட்டல். 9. தமிழ் வடமொழிக் கிளையென்று அயலார் கருதுமாறு, அடிப்படைத் தமிழ்ச்சொற்கட்கெல்லாம் வலிந்தும் நலிந்தும் வடசொன் மூலங் காட்டல். 10. வடமொழி தேவமொழி யென்றும், பிராமணர் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், வேதக்கால ஆரியப் பூசாரியரால் புகுத்தப் பட்ட ஏமாற்றுக் கருத்துகளையும், பிறப்புத் தொடர்பான குலப்பிரிவினையையும், தொடர்ந்து போற்றல். 11. சமயச்சார்பான சொற்பொழிவுகளாற் பொதுமக்களை அறியாமையில் அமிழ்த்துதல். |